அதிரை பைத்துல்மாலில் ₹60 முதல் ₹70 லட்சம் வரை நகை மோசடி செய்தேன்.. நிர்வாகிகள் மெத்தனமாக இருந்தனர் - ஒப்புக்கொண்ட ஹாஜா சரீப்

Editorial
0


அதிரையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் அதிரை மக்களால் தொடங்கப்பட்ட பைத்துல்மால், முதியோர் பென்சன், பொதுமக்களை வட்டியிலிருந்து பாதுகாக்க வட்டியில்லா நகைக்கடனை வழங்கி வருகிறது. இதில் ஏராளமான மக்கள் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

அதாவது பைத்துல்மாலில் பணியாற்றிய ஹாஜா சரீப் என்ற நபர் கடனுக்காக பொதுமக்கள் வழங்கிய தங்க நகையை வேறொரு நிதி நிறுவனத்தில் வட்டிக்கு அடகு வைத்து அதற்கு பதில் கவரிங் நகையை கொடுத்து மோசடி செய்தார் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக அதிரை பைத்துல்மால் நிர்வாகமும் காவல் நிலையத்தில் ஹாஜா சரீப் மீது புகாரளித்தது.

இதுகுறித்து பைத்துல்மால் வெளியிட்ட விளக்கத்தில், "வட்டியில்லா நகைக்கடனை வழங்கி கந்து வட்டியை ஒழிப்பது நமது நோக்கம், தூரதிர்ஷ்டவசமாக A.ஹாஜா சரீப், கடற்கரைத்தெரு முஹல்லாவைச் சார்ந்தவர் சுத்து வட்டியைக் கொடுத்து மக்களது ரத்தத்தை உரிஞ்சும் நிதி நிறுவனங்களுடன் சேர்ந்து 1 கோடியே 42 இலட்சம் ரூபாய் மதிப்புடைய நகை மற்றும் பணமோசடியைச் செய்துள்ளார்.

மூத்த குற்றவியல் வழக்கறிஞர் ஒருவரது உதவியுடன் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 16/8/2022 அன்று தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அதிரை பைத்துல்மாலைப் பற்றியும் இந்த மோசடியைப் பற்றியும் தவறான தகவல்களையும் அவதூறுகளையும் தயவு செய்து மக்கள் மத்தியில் பரப்ப வேண்டாம். ABM அலுவகத்திற்கு நேரடியாகச் சென்று உங்களுடைய கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெறலாம்." என குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட ஹாஜா சரீப் வீடியோ மூலமாக விளக்கமளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "நான் ஒன்றரை கோடி மோசடி செய்ததாக சொல்கிறார்கள். அவ்வளவு எல்லாம் இல்லை. ₹60 லட்சம் முதல் ₹70 லட்சம் வரை மட்டுமே இருக்கும். நான் 9 ஆண்டுகள் பைத்துல்மாலில் வேலை செய்துள்ளேன். வியாபாரத்துக்காக நகையை எடுத்து அடகு வைத்தேன். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு வட்டி அதிகமானதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
யாராவது நகையை கேட்டு வந்தால் அந்த நகையை கொடுத்துவிட்டு வேறு நகையை அடகு வைப்பேன். தவறு என்று தெரிந்தாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அந்த பணத்தை வைத்து சொத்து எதுவும் வாங்கவில்லை. எனக்கு இந்த வீடு இருக்கிறது. அதை எடுத்துக்கொள்ளுங்கள். மீதமுள்ள தொகையை நானும், சகோதரர்கள் சம்பாதித்து வழங்கி விடுகிறோம்.

நான் இவ்வாறு செய்வது பைத்துல்மால் நிர்வாகிகளுக்கு தெரியாது. பைத்துல்மால் நிர்வாகிகள் ரொம்ப மெத்தனமாக நடந்துகொண்டார்கள். சோதனை எதுவும் செய்யமாட்டார்கள். என் தரப்பு வாதத்தை பைத்துல்மால் நிர்வாகிகள் கேட்கவில்லை. அவர்களாக வந்து சத்தம்போட்டு கையெழுத்து வாங்கி சென்றார்கள்." என்றார்.

(இது செய்தி வெளியான பின்னர் நம்மை தொடர்புகொண்ட ஹாஜா சரீப் இந்த வீடியோவை பதிவு செய்த நபர் தான் பேசிய சில விசயங்களை மறைத்துவிட்டதாக கூறினார். விரைவில் அவரது முழு பேட்டி அதிரை பிறையில் வெளியிடப்படும்)

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...