நினைத்தாலே இனிக்கும் அதிரையின் குளக்கரை குளியல்... மலரும் நினைவுகள் - 2

Editorial
0
குளங்களில் குளித்து களித்த காலங்கள்.

அந்நாட்களில் குளம் என்பது வாழ்க்கையில் இணைந்த ஒரு அம்சம் . இன்று போல் படித்துறைகள் வெறிச்சோடி கிடக்காது. விடியற்காலை முதல் இரவு வரையிலும் கூட குளக்கரைகள் சுறுப்பாக இருக்கும் .

நிச்சயமாக ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு குளம், அங்கீகாரம் பெற்ற குளமாக தெரு ஜமாத் அல்லது கிராம பஞ்சாயத்துக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். 
காலை நான்கு மணி முதலே," லேடிஸ் பர்ஸ்ட்" என்ற முறையில் மகளிர் அணி அணியணியாக குளிக்க வருவார்கள். சூரியன் வெளிவரும் முன்பே அவர்கள் அனைவரும் குளித்துவிட்டு ஆண்கள் குளிக்க வரும் முன்பே' பறக்க பறக்க' கரையேறுவார்கள். 

"வா புள்ளே சீக்கிரம்! இப்புடியா கெடந்து ஊறுவா?" "தண்ணியக்கண்டா ஒரு வாலயம் (கொண்டாட்டம் )" என்கிற மண்ணின் மொழிகளை அங்கு கேட்கலாம் .

உடல் குளிக்க மட்டுமல்ல; துணிகளை துவைக்கவும், பாத்திரங்களை கூடையில் வைத்து கழுவவும் கூட குளங்கள் மகளிர்க்கு பயன்பட்டன.

 காலை நான்குமணியளவில் குளக்கரைப்பக்கம் போகநேரிட்டால் வீட்டுப்பாத்திரங்களின் கலகல மணியோசையை காதார கேட்கலாம் கூடவே துணிகளை தப்பும் ஓசையும் சற்று நேரத்தில் அத்தனை பள்ளிகளிலும் ஒலிக்கும்  நகரா ஓசையும் தனி ஆனந்த அனுபவம். 

ஆண்கள் கரை ,பெண்கள் கரை என்று தனித்தனியா இருந்தாலும் காலையில் ஆண்கள் வரத்தொடங்கும்வரை பெண்களும் அங்கேயே குளிப்பார்கள். ஆண்கள் யாராவது சற்று முன்னதாக வந்துவிட்டால் அவர்கள் பெண்கள் கரையேறும்வரை, ராணி சந்தன சோப்பின் வாசனையை காற்றிலிருந்து கடன் பெற்றுக்கொண்டு  ஒதுங்கித்தான் நிற்க வேண்டும் .

குளங்களின் நிர்வாகம், மழைக்காலங்களில் குளங்களுக்கு நீர் வரும் பாதைகளை செப்பனிட்டு, நீர் நிறைந்ததும் அடைக்கவும் , நீர் வற்றியதும் கிடக்கும் நீரை வெளியேற்றி, மீன் பிடிக்கவும் வற்றி காய்ந்தபிறகு ஆழப்படுத்துதல் என்கிற "வெட்டு எடுக்கவும்" அந்த மண், களி இவைகளைக்கொண்டு குளத்தின் கரைகளை வலுப்படுத்தவும் பொறுப்பேற்றுக்கொள்ளும். இதற்காக ஏலம் விடப்படும். ஏலத்தில் சண்டையும் வரும். 

 மோட்டார் வைத்து தண்ணீர் இறைப்பதையும், மீன் பிடிப்பதையும், அங்கேயே ஏலம்போடுவதையும் பார்க்க, வயது வித்தியாசமின்றி கூட்டம் கூடும். மீன் பிடியலில் கிடைக்கும் விறால் மீன்களில் ஒன்று ஜமாத் தலைவர் வீட்டுக்கு கொடுத்து அனுப்பப்படும்.

 குளங்கள் காய்ந்து கிடக்கும் காலம் கிட்டத்தட்ட பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை காலமாக இருக்கும். அந்தக்காலம் குளங்கள் முழு நேர விளையாட்டு மைதானமாக மாறிவிடும் . ஆனால் கிரிக்கெட்டெல்லாம் எங்களுக்கு என்னவென்றே தெரியாது. சில்லுப்பந்து, பேட்மின்டன்,  கிளித்தட்டு, கபடி ஆகியவை பிரசித்தம் .

மலரும் நினைவுகள் தொடரும்

- இப்ராஹிம் அன்சாரி

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...