அதிராம்பட்டினத்தை சேர்ந்த கலைஞரின் சிறுவயது நண்பரை தெரியுமா?

Editorial
0

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த அவரது இளம் வயது நண்பர் ஒருவர் குறித்து நாம் அறிந்துகொள்வோம்.

கலைஞர் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக விளங்கியவர் அதிராம்பட்டினத்தை சேர்ந்த என்.எஸ். இளங்கோ அவர்கள். இளமை காலத்தில் கலைஞர், அண்ணாவுடன் இணைந்து பல்வேறு திராவிட போராட்டங்களை நடத்தியவர். தி.மு.க. வின் முன்னோடி தலைவர்களில் ஒருவராக விளங்கியவர்.

தி.மு.க. ஆரம்பித்த போது கட்சியின் முதல் கொள்கை பரப்பு செயலாளராக விளங்கியவர். மேலும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றினார். மேலும் அறிஞர் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோருடனும் நெருங்கிய நட்பு வைத்திருந்தார். 

தி.மு.க. தலைவர் கருணாநிதி - தயாளு அம்மாள் திருமணம் திருவாரூரில் 15-9-1948-ம் ஆண்டில் நடந்தது. இந்த திருமணத்தில் அறிஞர் அண்ணாதுரை, டி.இ.சீனிவாசன், புலவர் குழந்தையா ஆகியோருடன் அதிராம்பட்டினம் என்.எஸ்.இளங்கோவும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தி.மு.க. வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை இளங்கோ முன்னின்று செய்துள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.க.வில் இருந்து பிரிந்து ஈ.வெ.கி.சம்பத்தின் தமிழ் தேசிய கட்சியில் இணைந்தார்.

இதையடுத்து அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்து மூத்த நிர்வாகிகளில் ஒருவராக விளங்கினார். பின்னர் அ.தி.மு.க. வில் பிளவு ஏற்படுத்தப்பட்ட ஜானகி அணியில் சேர்ந்து பணியாற்றினார். அ.தி.மு.க.வில் தஞ்சை மாவட்ட அவை தலைவராக பணியாற்றினார்.

பின்னர் வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து விலகி ஓய்வு எடுக்க தொடங்கினார். கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி உடல்நலக் குறைவால் தஞ்சையில் என்.எஸ். இளங்கோ காலமானார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...