சிஏஏ எதிர்ப்பு, கைதிகள் விடுதலை, இடஒதுக்கீடு - வைகோவின் அசத்தல் தேர்தல் அறிக்கை

Editorial
0


இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவு அனைத்து மக்களுக்கும் சம உரிமையை உறுதி செய்கின்றது. மத்திய பா.ஜ.க. அரசு, அரசியல் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் வகையில், குடி உரிமைச் சட்டம் 1955-ஐ திருத்தம் செய்து, குடி உரிமை திருத்தச் சட்டத்தை (Citizenship Amendment Act) நிறைவேற்றி உள்ளது. இதன் தொடர்ச்சியாக தேசிய மக்கள் தொகை பதிவு ஏட்டையும் (National Peoples Register) நடைமுறைப்படுத்த முனைந்துள்ளது.

நாடு முழுவதும் சிறுபான்மை இஸ்லாமியர்களின் கொந்தளிப்புக்குக் காரணமான குடிஉரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஓங்கிக் குரல் கொடுக்கும்.

குடி உரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கம் கேரளா, இராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, பிகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதுபோல, தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்துவோம்.

முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட புள்ளி விவரங்களை எடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும்.

2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிபதி சச்சார் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்தும் வகையில், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தவும், கல்வி வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் சமூக நலத் திட்டங்களில் உரிய பங்கு கிடைக்கவும் குரல் கொடுப்போம்.

இஸ்லாமியர்களின் கோரிக்கையின்படி வக்ஃப் வாரியம் சீரமைக்க ஆவன செய்யப்படும். நீண்டகாலமாக விசாரணைக் கைதியாகச் சிறையில் வாடும் முஸ்லிம்களை, உடனடியாக விடுதலை செய்திட வலியுறுத்துவோம். இஸ்லாமிய பெண்களுக்கான தங்கும் விடுதிகளை, அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பதற்கும், மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவி சங்கத்தில் தற்போது வழங்கப்படும் 1:2 என்ற இணை மானியத்தை 1:3 என்ற விகிதத்தில் வழங்க ஆவன செய்யப்படும்

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் பெயரால் ஒரு புதிய பல்கலைக் கழகம் அமைந்திட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் குரல் கொடுக்கும்.

சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்படும் மதம் மாறிய தலித் கிறிஸ்தவ மக்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகள், சலுகைகள் கிடைக்க வலியுறுத்துவோம். அனைத்துத் துறைகளிலும் சிறுபான்மை மக்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய ‘சம வாய்ப்பு ஆணையம்' அமைக்கப்படும்

சிறுபான்மை மக்களுக்கு எதிராக இந்துத்துவ சக்திகள் தூண்டி வரும் மத வன்முறைகள், வெறுப்புப் பிரச்சாரங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் குரல் கொடுக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...