அதிரையில் கொரோனாவையே கதற வைக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்

Editorial
0
சில நாட்களுக்கு முன் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நடைபெற்ற கொரோனா பரிசோதனை முகாம் பற்றிய ஆடியோக்கள் தற்போது வாட்ஸ் அப் குழுமங்களில் வைரலாகி வருகின்றனர். அதில் ஒருவர் வேண்டுமென்றே அனைவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக ரிசல்ட் கூறி அழைத்து செல்கின்றனர். அரசுடன் சேர்ந்து சங்கமும் இதற்கு ஒத்துழைக்கிறது என்றும் குற்றம்சாட்டுகிறார்.

அடுத்த ஆடியோவில் பேசும் மற்றொரு நபர் கொரோனா சோதனை முகாமை ஏன் சங்கம் நடத்த வேண்டும்? கொரோனா நோயாளிகள் ஒருவரை வைத்து அரசு ₹50,000 கமிசன் போடுகிறது. என்று பேசுகிறார். இந்த ஆடியோக்களை அதிரை மக்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு கருத்து தெரிவிக்கும் பலரும் கொரோனா என்ற நோய் இல்லை என்றும் அரசு சதி செய்வதாகவும் கூறுகின்றனர்.

ஆனால், 2வது ஆடியோவில் வரும் கருத்தின் படி நோயாளி ஒருவர் மூலம் அரசு ₹50,000 கமிஷன் எடுக்கிறது என்பதற்கு சரியான ஆதாரங்கள் இல்லை. வாட்ஸ் அப், பேஸ்புக்கில் வைக்கப்படும் சதி கோட்பாடுகளை படித்துவிட்டு வாட்ஸ் அப் ஆடியோவில் அவர் ஒப்பித்துள்ளார்.

5 நாளுக்கு முன்னாடி பார்த்தேன், நல்லா இருந்தாங்க.... ஒரு வாரத்துக்கு முன்னாடி என் கிட்ட நல்லா பேசுனாங்க... இறந்துட்டாங்களா? என்ற பதறல்களை தற்போது அதிகம் கேட்க முடிகிறது.

அதிரையில் நன்றாக இருந்தவர்கள் வயது வித்தியாசமின்றி திடீர் திடீரென இறந்து வருகிறார்கள் என்ற தகவலை நண்பர்கள் கூறுகிறார்கள். அதில் சிலரது குடும்பத்தினருடன் பேசியபோது இறந்தவர்களுக்கு சில நாட்களாக காய்ச்சல், இருமல் அல்லது வயிற்றுப்போக்கு இருந்ததாக சொல்கிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு இறப்பதற்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா சோதனை செய்தீர்களா என்று கேட்டபோது இல்லை என்றார்கள். சிலர் எதுக்கு கேக்குறீங்க என்று ஆவேசப்படுகிறார்கள். இவர்கள் சொன்ன காரணங்கள் யாவும் கொரோனாவுக்கான அறிகுறிகள் தான். அதில் சிலருக்கு கொரோனா தொற்றும் இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் சோதனைக்கு செல்லாததால் உரிய சிகிச்சை அவர்களுக்கு கிடைக்கவில்லை.

பலர் ஊர்களில் சோதனை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டும் மக்கள் சோதனைக்கு முன் வருவதில்லை. கொரோனா சோதனை செய்து அவர்களுக்கு முறையான சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றப்பட்டு இருக்கலாம் அல்லது அவர்கள் மூலம் பிறருக்கு பரவுவதும் தடுக்கப்பட்டு இருக்கலாம்.  ஆனால், கொரோனா வைரசுக்கான அனைத்து அறிகுறிகள் இருந்தும், சில நாட்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டும் சோதனை செய்ய மறுக்கிறார்கள். அஞ்சுகிறார்கள். 

தவறு அவர்கள் மீது இல்லை. இப்படி சோதனை செய்யாமல் கொரோனா இருப்பதே தெரியாமல் இறந்தவர்கள் மரணத்துக்கு முக்கிய காரணம், கொரோனா பற்றிய வதந்தியை கிளப்பியவர்கள் தான்.

கொரோனா பற்றிய விழிப்புணர்வையோ, அதன் பாதிப்புகளையோ சொன்னால் அச்சப்பட வைக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஒரு வேளை அவர்கள் அச்சப்பட்டிருந்தால் கூட சோதனைக்கு சென்றிருப்பார்கள். ஆனால், அவர்கள் அச்சம் "மருத்துவமனையில் விஷ ஊசி போட்டு கொலை செய்துவிடுவார்கள். இது இல்லுமினாட்டி சதி" என வாட்ஸ் அப்பில் வரும் பொய்களை நம்பியதால் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த அச்சத்தை போக்க வேண்டியது அரசின் கடமை. அதுமட்டுமின்றி ஆங்காங்கே சுகாதார ஊழியர்கள், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், சோதனை மையங்கள், மருத்துவமனைகள் செய்யும் தவறுகள், முறைகேடுகளை முடிச்சுப்போட்டு சர்வதேச சதி என்று தொடர்புபடுத்தி விடுகின்றனர்.

மேல்குறிப்பிட்ட ஆட்கள், நிர்வாகங்கள் யாவரும் தவறு செய்யக்கூடியவர்கள் தான். முறைகேடுகளும் நடைபெற்று இருக்கலாம். அதை புகார் மூலமாகவோ வழக்கு மூலமாகவோ தீர்க்க வழி உள்ளது. ஆனால், அதை சதி என்று சித்திரப்படுத்தி காட்டி கோடிக்கணக்கான மக்களின் உயிர்களுடன் விளையாடாதீர்கள் கேடுகெட்டவர்களே... உங்களை நம்பிய பல அப்பாவி உயிர்கள் பறிபோகின்றன.

எது எதில் எல்லாம் சதி கோட்பாடுகளை பற்றி பேச வேண்டும் என்ற அடிப்படை அறிவு இன்றி தேவையற்ற வதந்திகளை கிளப்பி அச்சத்தை ஏற்படுத்தி தங்கள் புத்திசாலித்தனத்தை காட்ட நினைத்தவர்கள் இந்த யுகத்தின் மிக மோசமான கொலைகாரர்கள்.

நடக்கும் நிகழ்வுகள் யதார்த்தமானதாக இல்லை. ஆரம்ப நிலையை போல் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். தேவையற்ற கூட்டங்களை தவிருங்கள். மாஸ்க் அணிந்து வெளியில் செல்லுங்கள். வெளியூர் சென்று வந்தவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். அறிகுறி இருந்தால் தயவு செய்து சோதனை செய்து கொள்ளுங்கள். 

மறைக்க நினைத்தால் நம் மூலம் குடும்பத்தாருக்கும், ஊராருக்கும் பரவும் என்பதை மறவாதீர்கள். எதிரிகள் அவதூறு சொல்வார்கள் என்று அஞ்சி மறைக்கும் காலம் மலையேறிவிட்டது. எல்லா ஊர்களிலும் கொரோனா பரவிவிட்டது. எனவே அவதூறு பரப்பும் நிலையில் அவர்களும் இல்லை. பரப்பினாலும் பொருட்படுத்த வேண்டாம். அவர்களின் அவதூறுகளுக்கு பயந்து நாம் சோதனை செய்யாமல் மறைத்து உயிர்களை பறிகொடுக்க வேண்டாம்.

கொரோனா பற்றி பரவும் வதந்திகளை, கட்டுக்கதைகளை நம்பாமல் மருத்துவர்கள் சொல்வதை கேளுங்கள். உங்கள் புத்திசாலித்தனத்தை காட்ட வேண்டும் என்பதற்காக இது சதி சதி என்று சொல்லி உயிர்களில் விளையாட வேண்டாம். இதுபோன்ற அறிவிலிகளின் பேச்சைக் கேட்டு அலட்சியமாக இருந்து மீட்க முடியாத உயிரை பறிகொடுத்து விட வேண்டாம். இனியாவது உண்மையை உணர்வோம். மருத்துவர்கள், படித்தவர்கள் சொல்வதை கேட்போம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...