அதிரை வீடுகளில் உச்சம் தொட்ட மின் கட்டணம்... அதிர்ச்சியில் மக்கள்..!

Editorial
0

ஊரடங்கு உத்தரவு காரணமாக அரசின் பல்வேறு செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி வீடுகளில் 60 நாட்களுக்கு ஒருமுறை மின்சார பயன்பாட்டு அளவைக் கணக்கிடும் பணியும் மார்ச் 23-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. இதனால் 4 மாதங்களுக்கும் சேர்த்து மொத்தமாக மின் கட்டணம் வசூலித்தால் மானியம் மற்றும் நடப்பு டார்ஃபின் படி இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என நுகர்வோர்கள் அஞ்சினர்.

இதுகுறித்து விளக்கம் தந்த மின்வாரியம், பொதுமக்கள் பயன்படுத்திய யூனிட்டுகள் இருமாத கணக்கீட்டு அடிப்படையில் சரிசமமாகப் பிரித்து, கட்டணம் வசூலிக்கப்படும் என்றது.

பார்க்க: தினமணி செய்தி

இந்நிலையில் கணக்கீடு செய்யப்படாமல் இருந்த மின்சார பயன்பாடு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன. இது தான் அதிரை மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. வழக்கமாக 500, 800 ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வந்த அதிரை வீடுகளில் இம்முறை ₹2000 க்கும் மேல் மின் பயன்பாட்டு கட்டணத்தை ஊழியர்கள் குறித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இது குறித்து கூடுதல் கட்டணம் குறிக்கப்பட்டு உள்ள வீடுகளின் மின்சார அட்டையை பார்த்தபோது ஜனவரி மாதத்தில் இருந்து 4 மாதங்களுக்கும் சேர்த்து பயன்படுத்திய யூனிட்டை கணக்கிட்டு அதன் அடிப்படையில் மின் கட்டணத்தை ஊழியர்கள் குறித்துள்ளனர். 


இந்த படத்தில் உள்ள வீட்டின் பயன்பாட்டு கட்டண அட்டையை பார்த்தால் ₹700 முதல் ₹900 வரை கட்டி வந்த வீட்டுக்கு ₹2,506 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதில் தேதியை பார்த்தால் கடந்த ஜனவரி மாதத்துக்கு பிறகு இப்போது மே மாதம் கணக்கெடுப்புக்கு வந்துள்ளனர். அதன்படி பயனீட்டு அளவு 610 யூனிட் என குறிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த முறை எடுக்கப்பட்ட ரீடிங்கின்படி இம்முறை 1,020 யூனிட் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் குறிக்கப்பட்ட 610. இதன்படி பார்த்தால் 410 யூனிட் குறைக்கப்பட்டு உள்ளது. தற்போது ஊரடஙகு மற்றும் கோடை காரணமாக வீடுகளில் மின் பயன்பாடு, குறிப்பாக ஏ.சி. பயன்பாடு அதிகரித்து இருக்கும். இதனால் இந்த அளவுக்கு மின்சார கட்டணம் அதிகரித்து இருக்கலாம் என கூறினாலும், இந்த அளவுக்கு அதிகரிக்குமா என்ற கேள்வி எழுகிறது.


வேறு சில வீடுகளில் வழங்கப்பட்ட மின் அட்டைகளில் மின்வாரிய அறிவிப்பின்படி 2 மாதங்களாக பிரித்து மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது போல் குறிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அவற்றிலும் வழக்கத்தை விட கூடுதல் பயன்பாடும், கட்டணம் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஊரடங்கு காரணமாக போதிய வருமானம் இன்றி வீடுகளில் முடங்கியுள்ள மக்கள்க கூடுதம் கட்டணத்தை கண்டு அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்து உள்ளனர்.

மின்சார கட்டணம் எப்படி கணக்கிடப்படுகிறது?

◾தற்போது வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு 100 யூனிட்டுகள் வரை கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

200 யூனிட்டுகள் வரை பயன்படுத்தியிருந்தால்...

அரசின் இலவச சலுகை 100 யூனிட் போக எஞ்சிய 100 யூனிட்டுகளுக்கு தலா ரூ.1.50 (அரசு மானியம் போக) வீதம் ரூ.150 மற்றும் நிலைக் கட்டணம் ரூ.20 செலுத்த வேண்டும்.

201 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தும்போது...

நிலைக் கட்டணம் ரூ.30 உடன் சேர்த்து 200 யூனிட்டுகள் வரை தலா ரூ.2 வசூலிக்கப்படும். 201 முதல் 500 யூனிட் வரை தலா ரூ.3 கட்டணமாக வசூலிக்கப்படும்.

500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும்போது...

நிலைக் கட்டணம் ரூ.50 மற்றும் 200 யூனிட்டுகள் வரை யூனிட்டுக்கு தலா ரூ.3.50 வசூலிக்கப்படும்.2 01 முதல் 500 யூனிட் வரை தலா ரூ.4, 501 முதல் ரூ.6.60 என்ற அடிப்படையில் கணக்கீடு செய்யப்படுகிறது.

தற்போது இருமாதங்கள் பிரித்து எப்படி வசூலிக்க வேண்டும்?

உதாரணத்துக்கு பிப்ரவரி மாத கணக்கீட்டின்படி, 200 யூனிட்டுகள் பயன்படுத்திய மின்நுகா்வோா் கட்டணமாக ரூ.170 செலுத்தியிருப்பாா். அதன் பிறகு ஏப்ரலில் கணக்கீடு செய்யப்படாததால், பிப்ரவரியில் செலுத்திய அதே ரூ.170-ஐ செலுத்தியிருப்பாா். ஜூன் மாதத்தில் கணக்கீடு செய்யும்போது அவா் 430 யூனிட்டுகள் பயன்படுத்தியிருந்தால், அந்த யூனிட்டுகள் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கான மின்நுகா்வாக தலா 215 யூனிட்டுகளாகப் பிரிக்கப்படும். இதன்படி, 215 யூனிட்டுகளுக்கு பயன்பாட்டுக் கட்டணம் ரூ.245 (101-200 யூனிட் வரை ரூ.200 மற்றும் 201 முதல் 215 வரை ரூ.45) மற்றும் நிலைக் கட்டணம் ரூ.30 என ரூ.275 செலுத்த வேண்டும்.

இதன்படி, சம்பந்தப்பட்ட நுகா்வோா் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு ரூ.550 செலுத்த வேண்டும். மேலும் அவா் ஏப்ரலில் முந்தைய கணக்கீட்டுக் கட்டணமாக ரூ.170 செலுத்தியிருப்பதால், அதைக் கழித்துவிட்டு ரூ.380 செலுத்தினால் போதுமானது.

குறிப்பு: தினமணி செய்தியில் வழங்கப்பட்டு உள்ள தகவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தி

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...