அதிரையில் கெட்டதிலும் நல்லது... பொதுமக்களுக்கு நற்செய்தி, குடிமக்களுக்கு..?

Editorial
0
தமிழ்நாட்டில் நேற்று கொரோனாவால் ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது. மக்களை தான் காப்பாற்ற முடியாது, பொருளாதாரத்தையாவது காப்பாற்றுவோம் என துக்ளக் படித்த அதிமேதாவிகள் அளித்த ஆலோசனைகளை கேட்டு இந்த முடிவை அரசு எடுத்துள்ளது போல...

சரி, மதுக்கடைகளுக்கு அனுமதியளித்துள்ள தமிழ்நாடு அரசு, ஏழைகளுக்கு பயனளிக்கும் நோன்பு கஞ்சியை வழங்க ஏன் அனுமதி மறுக்கிறது என்பது அதிராம்பட்டினம் மக்களின் வாதம். இது ஒருபுறம் இருக்க பட்டுக்கோட்டையில் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெண்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிராம்பட்டினத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுமா என்ற கவலையில் பொதுமக்களும், ஆர்வத்தில் குடிமக்களும் உள்ளனர்.

"தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவைகளில் அதிராம்பட்டினம், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், ஒரத்தநாடு, நெய்வாசல், தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட கே.எம். எஸ் நகர், வல்லம் பேரூராட்சி, பேராவூரணி, ஆகிய பகுதிகளில் நோய்த்தொற்று உள்ளோரின் வீட்டிலிருந்து அதை சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் மற்றும் மேலும் இரண்டு கிலோமீட்டர் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக பார்க்கப்படுகிறது. அந்தப் பகுதிகளில் மே 17 வரை தற்போது உள்ள நிலையே தொடரும்." என தஞ்சை மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

இதன் அடிப்படையில் பார்த்தால் கண்டெய்ன்மெண்ட் பகுதியான அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதிராம்பட்டினத்தை சேர்ந்த பெரும்பாலானோர் குணமடைந்து ஊர் திரும்பிவிட்ட நிலையில், இன்னும் கண்டெய்ன்மெண்ட் பகுதியாக வைக்கப்பட்டிருப்பது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வரும் சூழலில், இந்த கெட்டதிலும் ஒரு நல்லது நடந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...