அதிரை பிறை நடுநிலை ஊடகம் இல்லை... நம்பினால் ஆழ்ந்த அனுதாபங்கள்

Editorial
1


இங்கு ஒவ்வொரு மனிதனும் பிறப்பின் அடிப்படையில் ஏதாவது ஒரு மதத்தை சார்ந்தவனாகவே இருப்பான். வளர்ந்த பின் அந்த மத கருத்தியலையோ அல்லது அத்துடன் கம்யூனிஸம், பெரியாரிசம், அம்பேத்கரிசம், இந்துத்துவம், தமிழ்தேசியம் என்ற கொள்கைகளையோ பின்பற்றுகிறான். அவனுடைய குடும்பம், நட்பு சூழல், கல்வி அதை தீர்மானிக்கிறது. எனவே அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு சார்பு உள்ளது. அது ஊடகவியலாளனாக இருந்தாலும் சரியே. 

ஆனால், இங்கு தான் ஊடகத்தின் அடிப்படை தன்மை நடுநிலை என்ற போலியான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இந்த போலி பிம்பத்தை பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். இல்லாத நடுநிலையை ஊடவியலாளனின் தகுதியாக நிலைநிறுத்த முயற்சிக்கிறார்கள். விளைவு, ஏதாவது ஒரு அரசியல்வாதியின் செயல்பாடு குறித்த கேள்வியை எழுப்பினால் அவனது தனிப்பட்ட சாதி, மதம், கொள்கை விமர்சிக்கப்படுகிறது. அவன் அடையாளப்படுத்தப்படுகிறான். நடுநிலையற்றவன் என்ற வார்த்தை உமிழப்படுகிறது. ஆண்டி இந்தியன், ஆண்டி தமிழன், அந்த சாதிக்காரன், கிறிஸ்துவன், இஸ்லாமியன், இந்து என்று அவர்களை பேச வைக்கிறது.

ஊடகவியலாளர்கள் தங்கள் கருத்தியலின் படி நியாயத்தின் பக்கம் துணை நிற்க வேண்டுமே தவிர, மய்யமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நடுநிலை, பெரும்பான்மை வாதம் என்ற பெயரில் தங்களை நல்லவர்களாய் காட்டிக்கொள்ள வேடம் போடுபவர்களே இங்கு அதிகம். அதை உடைத்து ஊடகத்துறையில் பணிபுரிந்தால், எதிர்ப்பு அதிகம் வரும். அதை உணர்ந்தே நாம் செயல்படுகிறோம். 

ஏனெனில் பெரும்பான்மைவாதத்தை தான் நாம் பொருட்படுத்தவில்லையே. நடுநிலை பேண வேண்டும் என்பதும் பெரும்பான்மைவாத கருத்தாகவே உள்ளது. பெரும்பான்மை வாதத்துக்கு ஆதரவாக செல்ல நாம் ஒன்னும் வியாபாரி இல்லை. நாங்கள் பத்திரிகையாளர்கள். சமத்துவத்தை ஓரிறைக் கொள்கையை வலியுறுத்தும் இஸ்லாம் தான் நமது மார்க்கம். அதிரை பிறையும் அந்த கொள்கையின் படியே செயல்படும். சாதி, இனம் என அனைத்து பேதங்களையும் தகர்த்து அனைவரும் சமம் என சொல்கிறது இஸ்லாம். எனவே சாதி, இன, மத வெறியை யார் தூக்கிப்பிடித்தாலும் எதிர்த்து கேட்போம். 

அதன் அடிப்படையில் தான் நாம் தமிழர் கட்சியின் இனவெறிப் போக்கை விமர்சித்தோம். உடனே நம்மை திமுக ஆதரவாளர்கள் என்றனர். பிறகு திமுக, அதிமுக இஸ்லாமிய பாதுகாவலன் என்று நாடகம் ஆடுவதாக செய்தி வெளியிட்டோம். பிறகு நாம் தமிழர் பற்றி வேறொரு செய்தி வெளியிட்டோம். அப்போதும் திமுக சொம்பு என்ற விமர்சனத்துடன் சேர்த்து அதிரை பிறை நடுநிலை ஊடகம் இல்லை என்று நமக்கு பாடம் எடுக்க தொடங்கினார். மீண்டும் திமுக தப்லீக் ஜமாத்தினருக்கு எந்த உதவியும் செய்யாதது குறித்து "திமுகவை இனியும் நம்ப வேண்டுமா?" என்று தலைப்பில் பதிவிட்டோம். அப்போது திமுகவினர் சிலர் நம்மை நாம் தமிழர் ஆதரவு, அதிமுக ஆதரவு என்று சாடினர். கந்தூரியை பற்றி விமர்சித்தபோது அந்த தெருக்காரன் என்றனர். தெருவெறியை பற்றி விமர்சித்தபோது இந்த தெருகாரன் என்கின்றனர்.

ஒரு கட்சியை பற்றி விமர்சிக்கும் ஊடகம் எதிர்நிலையில் உள்ள கட்சிக்கு ஆதரவானது என கூறுவது இயல்பான ஒன்றாகிவிட்டது. அரசியல் புரிதலில் இவர்கள் LKG-ஆகவே உள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. அதிரை பிறை அறத்தின் சார்பிலும், பாதிக்கப்பட்டவர்களின் சார்பு நிலையில் இருந்தும், அநீதியாளனுக்கு எதிராகவும் தான் செய்தி வெளியிடும். எங்கள் கொள்கை அது தான். இதுகுறித்து கிஞ்சித்தும் அறிவின்றி இதெல்லாம் ஒரு பத்திரிகை தர்மமா? நடுநிலையா? என சிலர் பாடம் எடுக்கிறார்கள்.

அதிரை பிறை என்றும் குரலற்றவர்களின் குரலாய் இருக்கும்... நடுநிலை என்பது பொருளாதாரம் சார்ந்த இதழியலின் கொள்கை. அதன் கோரப்பசிக்கு பலியாக நாம் விரும்பவில்லை. அநீதியாளனுக்கு எதிராக பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக சார்பு நிலை எடுத்து நீதியின் பக்கம் நாம் பணியாற்றுவோம். மதவெறி, சாதிவெறி, இனவெறி, தெருவெறி, குல, குடும்ப வெறியர்களின் ஆதரவை பெற நடுநிலை வேடமிட்டு நடிக்க நாம் விரும்பவில்லை. அவர்களின் ஆதரவு இருந்தால்தான் இப்படி ஒரு தளம் நடத்த வேண்டிய அவசியம் நமக்கில்லை. நடுநிலை ஊடகத்தைதான் விரும்புவோம் என்பவர்களுக்கான ஊடகம்  பிறை அல்ல. எனவே உங்கள் ஆதரவும் நமக்கு அவசியம் இல்லை. அதே நேரம் நீங்கள் தேடும் நடுநிலை ஊடகம் கடலிலும் கிடைக்காது. செவ்வாய் கிரகத்துக்கு சென்றாலும் இருக்காது.  அதிரை பிறை என்றும் இதுபோன்ற பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராகவே செயல்படும்.

எனவே அதிரை பிறை நடுநிலை ஊடகம் அல்ல. அவ்வாறு நம்பிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Post a Comment

1Comments
  1. முதுகு எலும்பு இல்லாத வர்கள் குறை சொல்லி தான் திரிவார்கள் அதற்கு பதில் அழிக்காமல் நெஞ்சை நிமிர்த்தி உண்மை உரக்க சொல்லுங்கள்

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...