அதிரை மக்கள் உயிர் அவ்வளவு அசால்டா போச்சா..?

Editorial
0

ஊரடங்கு காலத்தில் அதிராம்பட்டினத்தில் இருந்து வெளியூர்களுக்கு மருத்துவம் போன்ற அவசரத் தேவைக்காக செல்ல முடியாமல் பலர் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபோன்றவர்களுக்கு உதவ இ பாஸ் எனப்படும் ஆன்லைன் அனுமதிச் சீட்டு பெற்று வெளியூர் செல்லும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இதுகுறித்து பலருக்கும் தெரியாத காரணத்தால் அவசரத் தேவைகளுக்கு கூட செல்லாமல் ஊரிலேயே பலர் முடங்கியுள்ளனர். எனவே இதை எப்படி விண்ணப்பிப்பது என்பதை அதிரை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அதிரை பிறை கடந்த சில நாட்களுக்கு முன் வழிகாட்டு பதிவு ஒன்றை வெளியிட்டது.

இதனைப் பின்பற்றி அவசர, அத்தியாவசிய சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை தஞ்சை போன்ற நகரங்களுக்கு செல்ல விரும்புவோரும் பிரசவத்துக்காக செல்வரும், உள்ளூரில்  மருந்துகள் கிடைக்காததால் பட்டுக்கோட்டைக்கு சென்று வாங்குவதற்காக சிலரும் இ-பாஸ் பெற விண்ணப்பித்து உள்ளனர்.

ஆனால் இவர்களில் பலருக்கு இ பாஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவத்திற்கு விண்ணப்பித்தவருக்கு உடனடியாக பதிலை சொல்லாமல் சில மணிநேரங்கள் கழித்து நிராகரிக்கப்பட்டதற்கான தகவலை மட்டும் அனுப்புவதாக அதிரை மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிராம்பட்டினத்தில் நோய் பாதிப்பு குறைந்து விட்ட நிலையிலும் அவசரத் தேவைக்காக அரசு வழங்கிய சலுகையை கூட பயன்படுத்த விடாமல் அதிகாரிகள் தடுப்பதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.

ஏற்கனவே அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் என்றாலே பல தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்க தயங்குகின்றனர். இப்படி இருக்கும் சூழலில் மருத்துவமனைக்கே செல்ல விடாமல் தடுக்கும் வகையில் இ பாஸ் வழங்க அதிகாரிகள் மறுப்பது மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இ பாஸ் இருந்தால் மட்டுமே அதிராம்பட்டினத்தில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலையில் அதனை வழங்காவிட்டால் அவசர மருத்துவத்திற்காக மக்கள் எப்படி வெளியூர் செல்வார்கள்? தஞ்சை மாவட்ட ஆட்சியரகம் இதனை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிரை மக்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இ பாஸுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

1. இதற்கு விண்ணப்பிக்க பயணிப்பவரின் ஆதார் அட்டை அல்லது வேறு அரசு அடையாள ஆவணம் (Documents) தேவைப்படும்.

2. விண்ணப்பித்தவருடன் ஒன்று அல்லது இரண்டு நபர்கள் செல்லலாம். அவர்களின் வயது மற்றும் தொலைபேசி எண் மட்டும் இருந்தால் போதுமானது.

3. அவர்கள் செல்லக்கூடிய வாகனத்தின் பதிவு எண் (registration number) தெரிந்திருக்க வேண்டும்.

4. இந்த இணையதள லிங்கை கிளிக் செய்து https://serviceonline.gov.in/tamilnadu/directApply.do?serviceId=721
 விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். 


5. பிறகு உங்கள் தொலைபேசி எண்ணிற்கு இரண்டு குறுஞ்செய்திகள் வரும்.

6. முதல் குறுஞ்செய்தியில் நீங்கள் அனுமதி கேட்பதற்கான விபரம் வரும்.

7. இரண்டாவது குறுஞ்செய்தியில் உங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா என்பது பற்றிய தகவல் வரும்.

8. அனுமதி வழங்கப்பட்டதாக இருந்தால் நீங்கள் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு பயணம் செய்யலாம்.

- அதிரை பிறை

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...