அதிரையில் பள்ளிவாசல்களாக மாறிய வீடுகள்... மனதை குளிர்விக்கும் தொழுகை, குர்ஆன் சத்தம்

ரமலான் மாத பிறை தென்பட்டதும் நோன்பிருக்க தொடங்கும் நாம், இந்தாண்டு பள்ளிவாசல்கள் இல்லாத புதுவிதமான முறையில் நோன்பை துவங்கியுள்ளோம்.

தமிழகத்தின் பல பகுதிகளில் ரமலான முதல் பிறை வெள்ளிக்கிழமை தென்பட்டது. இதனையடுத்து சனிக்கிழமையான நேற்று முதல் நோன்பை நிறைவேற்றி, தற்போது இரண்டாவது நோன்பை நோற்றுள்ளோம்.

உலகம் முழுவதும் தாக்கியுள்ள கொரோனா நோய், இந்தியாவில் பரவி வருகிறது. இந்த கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது.

இதனால் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தக்கூடாது, நோன்பு கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு விநியோகிக்கக் கூடாது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை ரமலான் பிறை தென்பட்டதையடுத்து அனைத்து வீடுகளும் தராவீஹ் தொழுகைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஊரின் பெரும்பாலான வீடுகள் பள்ளிவாசல்கள் போல் மாறி உள்ளன.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் நபி (ஸல்) கூறினார்கள்: 

"கல்லறை மற்றும் குளியல் அறையை தவிர பூமி முழுவதும் பள்ளிவாசல் தான்." 
-திர்மிதி 317

அதிரையில் ஒவ்வொரு வீட்டிலும் குர்ஆன் மனனம் செய்த ஹாபிழ்கள் அல்லது மனனம் செய்துகொண்டிருக்கும் வருங்கால ஹாபிழ்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தங்களது வீடுகளில் தராவிஹ் தொழுகை நடத்தி வருகிறார்கள். மேலும் சில வீடுகளில் கியாம்-அல்-லைல் எனப்படும் இரவுத் தொழுகையும் நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் தொழுகைக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதைப்போல, வீடுகளிலும் தொழுகைக்கான நேரம் ஒதுக்கப்பட்டு தொழுகை நடத்தப்படுகிறது. இதனால் பள்ளிவாசல்களில் ஒலிக்கும் குர்ஆன் சப்தம் அனைத்து வீடுகளிலும் கேட்கத் தொடங்கியுள்ளது.

நாட்டில் ஊரடங்கு மே-3ஆம் தேதி வரை இருப்பதால் அல்லாஹ்வின் இறையில்லமான பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டுருப்பது வேதனையளிக்கிறது.

இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் இந்த கொடிய நோயான கொரோனாவிடமிருந்து நம்மை பாதுகாத்து, ஊரடங்கை மேலும் நீட்டிக்காமல், விரைவாக பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டு, புனிதமிக்க இம்மாதத்தில் வழக்கத்தைவிட அதிகமான நன்மைகளை செய்ய உதவிப்புரிவானாக..

ஆமீன்...!

- இர்ஷாத் பின் ஜஹபர் அலி

Post a Comment

0 Comments