அதிரையில் பரவி வரும் பதவி வெறி வைரஸ்

Editorial
0
பணம், பதவி, அந்தஸ்து என்பதற்கு இவ்வுலகில் பலரும் அடிமையாகி வருகின்றனர். ஆனால், முஸ்லிம்கள் இவற்றை ஒரு பொருட்டாகவே மதிக்கக்கூடாது. இவை யாவும் இவ்வுலகில் அல்லாஹ் நம்மை சோதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவையே. ஆனால், ஈமான் கொண்ட முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நமதூரில் பதவி மோகம், புகழ்பெற வேண்டும் என்ற ஆசை அதிகரித்து வருகிறது. அரசியல் பதவிகளை கடந்து உள்ளூரில் உள்ள ஜமாத்து பதவிகள், பள்ளிவாசல் நிர்வாகம், இதர அமைப்புகள் என பலவற்றில் பதவிபெற பல காரியங்களை செய்கிறார்கள்.

இந்த பதவிகளை பெற்று மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வெகு சிலருக்கு மட்டுமே இருப்பதை அறிய முடிகிறது. இந்த பதவி மூலம் ஊரில் பிரபலமாக வேண்டும், பொருளாதார அடிப்படையிலோ அல்லது வேறு வகையிலோ ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காகவோ, அந்தஸ்துக்காகவோ, தனது தந்தை இருந்த பதவி தனக்கு வர வேண்டும் என்ற குடும்ப கவுரவத்துக்காகவோ, தனக்கு பிடிக்காதவனுக்கு அந்த பதவி கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவோ பதவியை பெற நினைக்கிறார்கள். சிலர் தாங்கள் அந்த பதவியில் அமராமல் தான் என்ன சொன்னாலும் கேட்கும் ஒருவரை பதவியில் அமர்த்தி மேல்குறிப்பிட்ட ஆதாயங்களை அடைய முயல்கின்றனர்.

ஊரில் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நன்கு படித்தவர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் பலர் உள்ளார்கள். ஆனால், பொருளாதாரம், குடும்ப பலத்தை மட்டும் வைத்து தகுதியற்ரவர்கள் பதவியில் அமர்கின்றனர். பதவிக்கு வந்த பிறகும் இவர்கள் மக்களுக்காக, தங்களுக்கு கிடைத்த பொறுப்பை சரிவர செய்யாமல் பொறுப்பற்று நடந்துகொள்கிறார்கள். தங்கள் பொறுப்பை வைத்து உறவினர்கள், என்ன தவறு செய்தாலும் கண்டுகொள்ளாமல் பாராட்டும் ஜால்ராக்களுக்கு தேவையானதை மட்டும் செய்துவிட்டு பொறுப்புக்கும், பயனடைய வேண்டிய மக்களுக்கும் துரோகம் இழைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

தன்னிடம் ஒரு புகார் வந்தால், குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் பொருளாதாரம், குடும்ப அந்தஸ்தை பார்த்து நடவடிக்கை எடுக்கின்றனர். அவர் உண்மையிலேயே தவறு செய்திருந்தாலும், அதை மூடி மறைத்து தவறு செய்தவரை காக்கின்றனர். தாங்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டினாலோ தட்டிக்கேட்டாலோ தங்களை சார்ந்தவர்களை, ஜால்ரா போடுபவர்களை அவர்கள் மீது ஏவிவிட்டு சாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால், சுயமரியாதையை முக்கியமான நினைக்கும் பலர் அவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்பது இல்லை.

தான் உடைத்தால் மண் சட்டி, பிறர் உடைத்தால் பொன் சட்டி என்ற நிலை தான் அதிரையில் இன்று பதவிகளில் அமர்ந்திருக்கும் பலரது கொள்கையாக உள்ளது. குறிப்பாக எந்த ஒரு முடிவு எடுத்தாகும் இவர்களிடம் இஸ்லாம் அதிகம் வலியுறுத்திய மசூரா எனப்படும் கூட்டு ஆலோசனை இருக்காது. பிறரது கருத்துகளை ஏற்பதற்கு மனம் இருக்காது. ஏற்பதை விட கேட்பதற்கு கூட மனம் வருவதில்லை. தனது கருத்துக்களை விட சிறப்பான கருத்துக்களை வேறொருவர் சொல்லிவிட்டால் அவர் மேல்  கொண்டு ஒதுக்கிவிடுவார்கள்.

ஒருவேளை இவர்களுக்கு இந்த பதவி கிடைக்கவில்லை என்றால், அதற்கு எதிராக போட்டியாக ஒரு அமைப்பு தொடங்கி தங்களை தாங்களே தலைவர்களாக முடி சூடிக்கொள்வார்கள். இவர்களுக்கு தேவை தான் சொன்னாலும் தலையாட்டும் ஒரு ஆட்டு மந்தை கூட்டம் மட்டுமே. இவர்களின் இந்த சர்வாதிகார மோகத்துக்காக சேவை என்ற காரணத்தை சொல்லி பலரிடம் நிதி வசூல் செய்து அதையும் பயனுள்ள வகையில் செயல்படுத்தாமல் வீணடிப்பார்கள்.

பதவியை பற்றி இஸ்லாம் தெளிவாக நமக்கு கற்றுத்தருகிறது:

நமக்கு ஒரு பதவி கிடைக்கிறது என்றால் அது நம்முடைய திறமையால் கிடைத்தது இல்லை மாறாக அது அல்லாஹ்வின் நாட்டம், சோதனை, உதவி என்றே ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். மேலும் மார்க்கத்தை எத்திவைக்கும் தாவா பணியாகட்டும் ஏனைய சமுதாயப் பணியாகட்டும் நாம் அதற்காக செயல்படும் ஒரு கருவியேயாகும் என்பதையும் அல்லாஹ்வின் ஏவல்களை செய்யும் ஒரு அடிமையாகவே எண்ணி செயல்பட வேண்டும்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்' "நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது." 
(அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 7148)

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: பூமியின் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் நீங்கள் வெற்றி கொள்வீர்கள். இறைவனை அஞ்சி அமானிதத்தை நிறைவேற்றியவரைத் தவிர அவைகளை நிர்வகிப்பவர்கள் நரகத்தில் இருப்பார்கள்." (நூல்: அஹ்மத் 22030)

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்: "நான் என்னுடைய ரப்பின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன்; ஆனால் நீங்களோ அதைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து என் அதிகாரத்தில் இல்லை; அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை; சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் 6:57)

பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான பாதுகாவலனான அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவார்கள்; (அப்போது தீர்ப்பு கூறும்) அதிகாரம் அவனுக்கே உண்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அவன் கணக்கு வாங்குவதில் மிகவும் விரைவானவன். (அல்குர்ஆன் 6:62)

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும்,அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர் களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:36)

மறுமையில் கேள்வி கணக்கிற்க்காக மஹ்ஷர் மைதானத்தில் நிறுத்தப்படுவோம் என்பது அனைவரும் அறிந்ததே. அங்குள்ள ஒரு நாள் என்பது உலகில் 50,000 வருடங்களுக்கு சமமானதாகும். சுட்டெரிக்கும் வெப்பத்தினால் மக்கள் கடுமையான வேதனை அடையும் அந்த நிலையில் ஏழு சாராருக்கு மட்டும் அந்த வெப்பத்திலிருந்து பாதுகாத்து அல்லாஹ் தனது அர்ஷின் அடியில் நிழல் வழங்குவான். அங்கு அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் அங்கு இருக்காது. அதில் தனக்கு கொடுக்கப்பட்ட பதவியை அழகிய முறையில் பயன்படுதியவரும் ஒருவர் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :

அல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழுபேருக் குநிழல் அளிப்பான்:

1. நீதிமிக்க ஆட்சியாளர்.

2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.

3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில் கண்ணீர் சிந்திய மனிதன்).

4. பள்ளிவாசலுடன் எப்போதும் தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர்.

5. இறைவழியில் நட்புகொண்ட இருவர்

6.அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்' என்று கூறியவர்.

7. தம் இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். (அறிவிப்பாளர் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் புகாரி 6806)

அதேபோல் தம்முடைய பதவியை தவறான வழியில் பயன்படுத்துபவர்களையும் அல்லாஹ் வன்மையாக எச்சரிக்கிறான்.

அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 30:7)

புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் 'எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா?எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே" எனக் கூறுவான். (அல்குர்ஆன் 69:25-29)

'நீ பரிசுத்தமாகிட உனக்கு விருப்பம் உண்டா? நான் உனது இறை வனை நோக்கி வழி காட்டுகிறேன்! (இறைவனை) அஞ்சிக் கொள்!' எனக் கூறுவீராக" (என்று இறைவன் கூறினான்.) (அல் குர்ஆன் 79:18,19)

ஃபிர்அவ்னுக்கு அனைத்து ஆற்றலையும் அல்லாஹ் கொடுத்திருந்தால் ஆனால் அவனோ இறையச்சம் இல்லாமல் தன்னையே கடவுள் என்று அகந்தை கொண்டிருந்தான். அவனை நோக்கி அல்லாஹ் கூறுவதை பாருங்கள்.

''அவனை(ஃபிர்அவ்னை) இம்மையிலும் மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ் பிடித்தான்.'' (அல்குர்ஆன் 79:25)

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவ ராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:159)

தமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவோருக்கும் தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் சிறந்ததும் நிலையானதுமாகும். (அல்குர்ஆன் 42:37:38)

திடவுறுதி, பொறுமை, வீரம்

''(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்.'' .(அல்குர்ஆன் 3:159)

தகுதியும் திறமையும்

'ஓர் அவையில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருந்த போது அவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். 'மறுமை நாள் எப்போது எனக் கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை' என்றனர். வேறு சிலர், 'அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை' என்றனர்.

முடிவாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, 'மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)' இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது கூறினார்கள்.' அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்." அதற்கவர், 'அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, 'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 59)

பாரபட்சம் இருக்கக் கூடாது

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)

மக்ஸுமிய்யா எனும் (குரைஷிக்) குலத்தைச் சேர்ந்த பெண் ஒருமுறை திருடிவிட்டார். இது (உயர்ந்த குலமெனத் தம்மைக் கருதி வந்த) குரைஷிக் குலத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ‘இது குறித்து நபிகள் நாயகத்திடம் யாரால் பரிந்து பேச முடியும்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவால் மட்டுமே இயலும் என்று அவர்கள் பேசிக் கொண்டனர். உஸாமா, நபிகள் நாயகத்திடம் இது குறித்துப் பேசினார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அல்லாஹ்வுடைய குற்றவியல் சட்டங்களில் நீர் பரிந்து பேசுகிறீரா? எனக் கடிந்து விட்டு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் ‘மனிதர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் உயர்ந்தவன் திருடினால் விட்டு விடுவார்கள். பலவீனமானவன் திருடினால் தண்டனையை நிறைவேற்றுவார்கள் இதன் காரணமாகவே அழிந்து போயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நானே வெட்டுவேன்’ என்று குறிப்பிட்டார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 6787)

உயிருக்கு உயிர் கண்ணுக்குக் கண் மூக்குக்கு மூக்கு காதுக்குக் காது பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப் பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.(5:45)

பதவி என்பது பொறுப்பு

''செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவை.'' (அல்குர்ஆன் 17:36)

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்." (நூல்: புகாரி 7138)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தனக்கு ஏவப் பட்டதை மனமுவந்து திருப்தியுடன் நிறைவேற்றும் நம்பிக்கைக்குரிய கருவூலக் காப்பாளர் தர்மம் செய்தவராவார். (அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 18836)

தம் கட்டுப்பாட்டில் உள்ள செல்வதினாலேயே பலர் தடுமாறி விடுகின்றனர். நாம் எப்படிப் பட்ட நம்பிக்கையாளராக இருக்க வேண்டும் என்பதை திருக் குரானில் கூறப்பட்டுள்ள இந்த சாம்பவம் நமக்கு தெளிவு படுத்தும்.

'இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!" என்று கூறினார். 'நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!" என்று கூறினேன். அதற்கவர் 'அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!" என்றார். 'நான் உம்மை கேலி செய்யவில்லை!" என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். 'இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!" என அப்துல்லாஹ்வின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். (நூல்: புகாரி 2272)

நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148)

அபூ மூஸா (ரலி) அறிவித்தார்கள்: "நானும் அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த மற்றும் இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களிடம் சென்றோம்; (அவர்கள் இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பதவி கேட்டார்கள்;) நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்), 'இவ்விருவரும் பதவி கேட்பார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை! (முன்பே நான் இதை அறிந்திருந்தால் இவர்களைத் தங்களிடம் அழைத்து வந்திருககவே மாட்டேன்!)" என்று கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி கொடுக்கமாட்டோம்!" என்று பதிலளித்தார்கள். (நூல்: புகாரி 2261)

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்''. (அல்குர்ஆன் 110:1-3)

இப்படி அல்-குர்ஆனிலும், நபி மொழிகளிலும் பதவி பற்றியும் ஆட்சி குறித்தும் பல விசயங்கள் கூறப்பட்டுள்ளன. இதைப் படித்து தங்களுக்கு அல்லாஹ் கொடுத்த மேலான வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு சேவைகள் செய்து மஹ்ஷர் மைதானத்தில் அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலை அடையும் பாக்கியத்தை பெறுவோமாக.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...