அரசே! கஞ்சி காய்ச்சுவதை வைத்து கஞ்சி காய்ச்சவேண்டாம்

Editorial
0
கஞ்சி என்றால் சின்னஞ்சிறு வயதில் அலுமினிய சட்டியை கையில் வைத்துக்கொண்டு வரிசையில் நின்று அதிரை கடற்கரைத்தெரு புளியமரத்தடியில் வாங்கிய கஞ்சிதான் நினைவுக்கு வரும். 

ஏதோ ஒரு புயல் அடித்த காலம். மக்களுக்கு உண்ண ஒன்றும் கிடைக்காது. இன்று போல தன்னார்வ அமைப்புகள் எல்லாம் அப்போது இல்லை. அந்தந்த தெருக்களில் வசதி படைத்த சிலர் அல்லது அரிசிமூட்டைகள் வைத்திருக்கும் சிலர் ஒன்று சேர்ந்து பெரிய சட்டி வைத்து கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள். தேங்காய் சிரட்டையால் ஆன அகப்பையை நீண்ட கம்பில் சொருகி தெரு நாட்டாண்மை அல்லது அவர் உத்தரவு பெற்றவர்கள்அளந்து அளந்து ஊற்ற  வாங்கி குடித்து இருக்கிறோம்.

 இப்படி , பஞ்ச காலத்தில் கஞ்சி காய்ச்சி ஊற்றுவது பரம்பரைப் பழக்கம். 

அதே முறைகளில்தான் நோன்பு காலங்களில் ஒவ்வொரு தெருப்பள்ளிகளிலும் கஞ்சி காய்ச்சுவதற்கு ஒரு கமிட்டியை தலைப்பிறைக்கு முன்பே போட்டுவிடுவார்கள். தினவாரியாக அட்டவணை போட்டு ஒவ்வொரு நாளும் அந்தந்த வீட்டில் வசூலித்து கஞ்சி காய்ச்சுவது இந்த கமிட்டி உறுப்பினர்களின் பொறுப்பு. சில பணக்காரர்கள் வீட்டு கஞ்சி என்றால் அந்த தினத்தன்று கஞ்சி வாங்கவும் பள்ளியில் நோன்பு திறக்கவும் சற்று கூடுதலாக கூட்டம் கூடும். 
அந்தக்காலத்தில் பணக்காரர்கள் என்றால் மலேசியா சிங்கப்பூர் சபுராளிகள்தான். இன்று பணக்காரர்கள் என்போர் அமெரிக்காவாழ் சகோதரர்களாகிவிட்டனர். அல்ஹம்துலில்லாஹ். 

போகட்டும்.

 கஞ்சிக்கமிட்டி, சில நாட்களில் போதுமான வசூல் வராமல் கஞ்சி காய்ச்ச திணறும். அரிசி பருப்பு வாங்கிவிட்டாலும் விறகு வாங்க பணம் பற்றாது. அப்படி நிலையில் கஞ்சி கமிட்டி சிறார்கள் தோப்புகளுக்கு விறகு பொறுக்க கிளம்பி விடுவார்கள் . அவ்வாறு பள்ளியாத்தோப்பில் சுள்ளி பொறுக்கிய அனுபவங்கள் எமக்கும் உண்டு. 

அப்படியெல்லாம் நோன்பு நேரத்தில் பள்ளிவாசல்களில் கஞ்சிகாய்ச்சி அனைவரும் பகிர்ந்து பள்ளியில் நிறைந்து அமர்ந்து  நோன்பு திறப்பது நமது
 ஊர்களில் தொன்று தொட்டு நிலவும் முறையாகும். 

ஆனால் இப்படிப்பட்ட கொடிய 
தொற்று நோய் காலத்தில் கவனத்துடன் சமூகஇடைவெளியைக் கடைப்பிடித்து கஞ்சி வழங்க அனுமதிக்க வேண்டும் என்பதே நமது ஆத்மார்த்தமான கோரிக்கை. 

இதனால் அரசின் சுமை மற்றும் அழுத்தம் சற்று குறையும். மக்களுக்கு ஒரு வேளை உணவாவது கஞ்சியின் வடிவில் அளிப்பதால் தொற்று நோய் காலத்தில் மக்களுக்கு உணவளிக்கும் அரசின் சுமை சற்று இலகுவாகும். 

கஞ்சி காய்ச்ச அனுமதிப்பதால் அரசு வற்புறுத்தும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க இயலாதோ என்று அரசு நிர்வாகம் அஞ்சுவதாக சொல்வதில் அர்த்தமிருப்பதாக தோன்றவில்லை. காரணம் நிவாரணப் பொருட்களை வழங்கும் இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டத்தை அனுமதிக்கும் அரசு, திட்டமிடாத ஊரடங்கை அறிவித்த நேரத்தில் கோயம்பேடு பேருந்து மற்றும் காய்கறி சந்தையில் கூடிய கூட்டங்களை ஒப்பிடும்போது மாலை நேரத்தில் ஒரு அரை மணிநேரம் சமூக இடைவெளி விட்டு ஒரு மொஹல்லா அல்லது ஒரு தெருவைச்சேர்ந்த நூறு பேர் கூட கஞ்சி வாங்குவதற்கு அனுமதி மறுப்பதன் பின்ணணியில் ஏதேனும் உள் நோக்கம் இருக்குமோ என்ற சந்தேக உணர்வு ஏற்படுவதை தடுக்க இயலவில்லை. இந்த களங்கம் நிச்சயம் அரசு மீது ஏற்படும். இதைத்துடைக்க இந்த புனித மாதத்தில் கஞ்சி காய்ச்சி ஏழைகளுக்கு வழங்க அரசு அனுமதிக்க வேண்டும். 

அம்மா உணவகத்தில் கூடும் கூட்ட அளவு கூட பள்ளிகளில் இருக்காது.  வீடுகளுக்கு அலுமனிய பைகள் மூலம் கஞ்சியை நிரப்பி கொண்டு போய் வீட்டு வாசல்களில் வழங்கிட தன்னார்வத் தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். 

மேலும் நோன்புக்கஞ்சி, சாதி மதப்பாகுபாடு இன்றி வழங்கப்படும் நல்லிணக்கத்தின் அடையாளம்.

கைகளில் தூக்குச்சட்டியுடன் காத்துக்கிடக்கும் பல கூலித்தொழிலாளர்களின் புலம்பல் அரசின் காதுகளில் கேட்கவேண்டும். அரசு காதுகளைத் திறக்க வேண்டும். 

ஒரு மதசார்பற்ற நாட்டில் கோயில்களில் மூன்றுவேளை அன்னதானம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது. அரசும் அதற்கு அனுமதி தரும் நிலையை எட்டி இருக்கும் போது மாலை ஒரே வேளை பள்ளிகளின்  நிர்வாகக்குழுக்களின் பொறுப்பில் கஞ்சி காய்ச்ச நான்கு பேர்களை மட்டும் அனுமதிப்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது என்பதை அரசு உணரவேண்டும். 

இந்த நெருக்கடியான நேரத்தில், பல்வேறு
 வகைகளிலும் அரசுக்கு ஒத்துழைப்பு 
 வழங்கும் முஸ்லிம் சமுதாய மக்கள் தொடர்ந்து அந்த ஒத்துழைப்பை வழங்குவார்கள். அதே நேரம் அரசுக்கு கட்டுப்படும் இந்த சமுதாயத்தின் மிக எளிய கோரிக்கையை அரசு ஏற்று நோன்புக்கஞ்சி காய்ச்சி வழங்க அனுமதி வழங்க வேண்டும். 

புனித மாதம் நிறைவுறும்போது, நாடும் உலகும் புனிதம் பெறுமாக!

ஆக்கம்: இப்ராஹிம் அன்சாரி

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...