அதிரையில் என்று ஒழியும் வீட்டு வரதட்சனை என்னும் கொடுமை

Editorial
0
முன்பெல்லாம் ஒரு திருமணம் நடக்க வேண்டும் என்றால் பெண் வீட்டார்கள் படும் கஷ்டம் சொல்லுந்தறமன்று. அதுவும் நமதூருடைய தொன்று தொட்ட வழிமுறைகள் இஸ்லாத்தில் பெண் வீட்டார்களுக்கு மேலும் சிரமங்களை தரக்கூடியதாகவே இருந்து வந்தது. குறிப்பாக வீட்டு வரதட்சனை என்ற இஸ்லாத்தில் இல்லாத குர்ஆன் ஹதீஸில் கூறப்படாத பாவத்தை மார்க்கம் அறிந்தவர்கள், அறியாதவர்கள் என அனைவரும் செய்துகொண்டிருக்கின்றனர்.

 இந்த வீட்டு வரதட்சனை கொடுமை இன்று வரையிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. பிற ஊர் மக்களால் சின்ன மக்கா என்று அழைக்கக்கூடிய நமது அதிரையில், குடும்பத்திற்க்கு ஒரு உலமா பெருமக்கள் இருக்கக்கூடிய நமது அதிரையில், கல்வியாளர்கள் நிறைந்து காணப்படும் நமதூர் அதிரையில் இன்னும் ஒழிக்க முடியாத கொடுமையாக இருந்து வருகின்றது இந்த வீட்டு வரதட்சனை என்னும் கொடுமை.

ஊரில் வாரா வாரம் ஜும்மா பயான்கள், மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டங்கள், சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இந்த பயான்களில் ஊரில் தொடர்ந்து நடக்கும் இந்த கொடுமையை பற்றி யாரும் வாய் திறப்பது இல்லை. மார்க்க விளக்க கூட்டங்கள் மூலம் அதிரையில் தொன்று தொட்டு பல காலங்களாக நடைபெற்று வந்த பல்வேறு மூடப் பழக்க வழக்கங்கள் அதிரையில் சமீப காலமாக ஒழிக்கப்பட்டுள்ளன. அதுபோல் இந்த வீட்டு வரதட்சனை கொடுமை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் கடந்த 10-15 வருடங்களாக அதிரை திருமணங்களில் பெரும்பாலும் வரதட்சனைகள் ஒழிக்கப்பட்டுள்ளது என்றாலும் இன்னும் பால்பழம், ஹல்வா போன்றவைகள் வாங்குவது, வீட்டு வரதட்சனை வாங்குவது, திருமணத்தில் இத்தனை சஹன் வேண்டும் என்று பெண் வீட்டாரிடம் வாங்குவது போன்றவைகள் தொடர்ந்து நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. இதில் மிகவும் வருத்தத்திற்குறிய செய்தி என்னவென்றால் பெரும்பாலான மாப்பிள்ளை வீட்டார்களுக்கு இது பாவம் என்றே தெரிவதில்லை. பலர் மார்க்கம் தெரியாமல் இதனை செய்து வருகின்றார்கள். இதற்கு யார் மீது குறை சொல்வது? பெண் வீட்டார்கள் மீதா? மாப்பிள்ளை வீட்டார்கள் மீதா? இந்த பாவம் குறித்து எச்சரிக்காத உலமாக்கள் மீதா?

நமதூரில் பல இளைஞர்கள் தங்களின் சகோதரிக்காக வீடு கட்ட பொருள் சேர்ப்பதற்க்காகவே தங்கள் பொன்னான இளமை பருவத்தை கழித்து விடுகின்றனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் வீடு கட்டுவதனாலேயே நமது அதிரையின் எல்லை மிலாரிக்காடு வரை நீண்டு விட்டது. இந்த நிலமையை பார்த்தால் நமதூர் எல்லை நடுவிக்காடு வரை நீண்டுவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இவ்வாறு கட்டப்படும் வீடுகளும் வருடத்தில் மே மற்றும் டிசெம்பர் மாதங்களை தவிர்த்து ஏனைய மாதங்களில் பூட்டப்பட்டே கிடப்பதை நம்மால் காணமுடிகின்றது. 

நமதூரில் இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் பெண் வீட்டார்களிடம் வரதட்சனை, வீடு வாங்குவது, ஏனைய பொருட்கள் வாங்குவதை விரும்புவதில்லை. நபி அவர்களின் வழிமுறைபடி மஹர் வழங்கி எளிமையான முறையில் திருமணம் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் பெற்றோர்கள் இந்த திருமணத்தை தங்கள் குடும்ப கவுரவத்திற்காகவும், பழமையில் ஊரிப்போன காரணத்தினாலும் எளிமையான முறையில் நடக்க விரும்புவதில்லை. 

மேலும் சில பெண் வீட்டார்கள் பலர் தாங்களாக முன்வந்து மாப்பிள்ளை வீட்டார்களுக்கு வீட்டையும் வழங்கி அன்பளிப்புகளையும் வழங்குகின்றனர். அன்பளிப்புகளுக்கு இஸ்லாத்தில் தடை இல்லை. செல்வம் படைத்த பெண் வீட்டார்கள் இவ்வாறு வழங்குவதன் காரணத்தால் மாப்பிள்ளை வீட்டார்களின் மனதில் பெண் வீட்டார்கள் அன்பளிப்பு தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பு சில காலங்கள் கழித்து அன்பளிப்பு தரவேண்டும் என்று கட்டளையாக மாறிவிடுகிறது. விளைவு.....பல ஏழை குமர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள்.

இவ்வாறு குடும்ப கவுரவத்திற்க்காக மார்க்க நடைமுறைகளை மறந்து ஆடம்பரமாக, வரதட்சனை வழங்கி திருமணம் செய்யப்படும் தம்பதிகளின் வாழ்வில் அல்லாஹ்வின் உதவியும் ஒற்றுமை இல்லாமல் போய்விடுகிறது.

இனி வரும் காலங்களில் வரதட்சனைகள் இல்லாத ஆடம்பரம் இல்லாத எளிமையான திருமணங்களை முடிக்க நாளைய மாப்பிள்ளைகளும் அவர்களின் பெற்றோர்களும் முனவர வேண்டும்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...