அதிரையில் பல நூற்றுக்கானோருக்கு இலவச கல்வி அளித்த இமாம் ஷாபி.. தற்போது இலவசமாக படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர்?

Editorial
0

Ads: Crescent builders - Coming Soon

அதிரையில் பாத்திமா பீவி அவர்களை முதல் ஆசிரியராக கொண்டு 9 மாணவர்கள், 3 பெஞ்சுகள், ஒரு கரும்பலகை, ஒரு மாட்டு வண்டியுடன் 1973 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி இமாம் ஷாபி பள்ளி தொடக்கப் பள்ளியாக நிறுவப்பட்டு, 1976 ஆம் ஆண்டில், பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை பெருகியதால், அது ஹாசன் வானொலி பூங்கா (பழைய இமாம் ஷாபி) இடத்திற்கு மாற்றப்பட்டது.


1977 ஆம் ஆண்டு சங்க சட்டத்தின் கீழ் அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, பள்ளி இந்த அறக்கட்டளையின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1985 ஆம் ஆண்டு பள்ளி மெட்ரிகுலேஷன் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் அதிரை நகராட்சி நிர்வாகம் இமாம் ஷபி பழைய பள்ளி வளாகத்தை கடந்த வாரம் ஜப்தி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து ஒரு வாரமாக சாகின் பாக்பானியில் அதிரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பெண்கள், ஆண்கள், முதியோர்கள், குழந்தைகள் என ஏராளமான மக்கள் போராட்டத்தில் இரவு பகல் பாராமல் பங்கெடுத்துள்ளனர்.


 இமாம் ஷாபி பழைய பள்ளிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வரும் நிலையில் பள்ளி குறித்து பல்வேறு வகைகளில் அவதூறுகள், குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஒரு நிர்வாகம் என்றால் பல்வேறு குறைகள் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களை மனதில் வைத்துக்கொண்டு இந்த விஷயத்தில் குறுகிய பார்வையோடு சிலர் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.


இதில் குறிப்பாக பலர் எழுப்பும் கேள்வி இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் அப்படி என்ன கல்வி சேவை செய்துவிட்டது? யாருக்காவது இலவசமாக கல்விய  அளித்துள்ளார்களா என கேள்விகளை எழுப்புகின்றனர். நமக்கு தெரியும் இமாம் ஷாபி பள்ளியில் இத்தனை ஆண்டுகளில் பலருக்கு இலவசமாக கல்வி வழங்கப்பட்டு இருக்கிறது என்று. குறிப்பாக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தொடங்கி வாகன ஓட்டுநர்கள் குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படுகிறது. இது அல்லாமல் பள்ளிக்கு எந்த தொடர்பும் இல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வரும் மாணவ மாணவிகளுக்கும் பல ஆண்டுகளாக இலவச கல்வி வழங்கி வருகிறது.


இமாம் ஷாபி சிறுபான்மை கல்வி நிறுவனமாக வரையறுக்கப்பட்டுள்ள பள்ளி. ஆர்டிஇ எனப்படும் கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் இது வராது. ஆர்டிஇ என்றால் குறிப்பிட்ட சதவீத மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் இலவசமாக கல்வி அளிக்க வேண்டும். ஆனால் அந்த சட்டத்திற்கே பொருந்தாத இமாம் ஷாபி பள்ளியும் இலவசமாக சமூக நலன் கருதி மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வியை அளித்து வருகிறது. இது தொடர்பாக இமாம் ஷாபி பள்ளி நிர்வாகத்திடம் நாம் விசாரித்தோம். அவர்கள் உதவி செய்வதை வெளியில் சொல்லி விளம்பரம் பெற விரும்பவில்லை, எனவே எத்தனை மாணவர்கள், யார் யார் இலவச கல்வி என்பதை தெரிவிக்க விரும்பவில்லை என கூறினார்கள்.


ஆனால் இந்த உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் பல்வேறு மட்டங்களில் நாம் விசாரித்தோம். அதில் தற்போது 47 மாணவர்கள் இலவசமாகவும் சலுகை கட்டனத்திலும் இமாம் ஷாபி பள்ளியில் பயின்று வருவது தெரியவந்தது. இதில் பள்ளி ஆசிரியர்கள் முதல் பள்ளியின் ஓட்டுனரின் குழந்தைகள் 6 பேரும் அடக்கம். எல்கேஜி தொடங்கி 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இவ்வாறு இலவச கல்வியை இமாம் ஷாபி பள்ளி அளித்து வருகிறது. இப்படி பள்ளி தொடங்கியதில் இருந்து இதுவரை எடுத்துக் கொண்டால் இலவசமாக கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை பல நூறை தாண்டும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...