அதிரையர்களை புற்றநோயாளிகளாக்கும் திட்டத்தை அறிவித்த திமுக

Editorial
0

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தஞ்சையின் முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் பட்டுக்கோட்டைக்கு யார் யார்வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவர் என்று மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

அந்த வகையில் திமுக சார்பில் பட்டுக்கோட்டை வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ கா.அண்ணாதுரை நிறுத்தப்பட்டுள்ளார். இன்று திமுக சார்பில் வெளியான தேர்தல் அறிக்கையில், அதிரைக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், ஒன்று தான் அதிராம்பட்டினத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதி. கடந்த 2016 தேர்தலின்போதும் இதே வாக்குறுதியை திமுக அளித்திருந்தது. அப்போதும், இந்த தொழிற்சாலையினால் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்து நமது அதிரை பிறையில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

ஆனால், மீண்டும் அந்த தொழிற்சாலை திட்டத்தை திமுக இம்முறையும் குறிப்பிட்டுள்ளது. இதனால் காயல்பட்டினத்தில் பல்வேறு சுகாதார சீர்கேடுகளும், பொதுமக்கள் நோய் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் இணையதளத்தின் விரிவான கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதை இங்கு பதிவிடுகிறோம்.

குறிப்பு: பூவுலகின் நண்பர்கள் அமைப்பு திமுகவுக்கு எதிரானது அல்ல. மாறாக அண்மையில் திருச்சியில் திமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் கூட பூவுலகின் நண்பர்கள் குழுவின் தலைவர் சுந்தர்ராஜன் உரையாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பூவுலகின் நண்பர்கள் குழுவின் கட்டுரை:

ஆலை மாசு காரணமாக அழிவின் விழிம்பில் காயல்பட்டினம் சுற்றுவட்டாரம்!

DCW தொழிற்சாலை 1925ஆம் ஆண்டில், தற்போதைய குஜராத் மாநிலத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்திலுள்ள தாரங்கதாரா நகரில் சோடா ஆஷ் என்ற பொருளை தயாரிப்பதற்காக துவக்கப் பட்டது. பின்னர் 1939ஆம் ஆண்டில், இந்நிறுவனம் சாஹ¨ ஜெய்ன் குடும்பத்தால் வாங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சுமார் 43% பங்குகளை (நவம்பர் 2012 நிலவரப்படி சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பு) இக்குடும்பத்தினர் வசமே உள்ளது.

1958ஆம் ஆண்டு, காஸ்டிக் சோடா என்ற பொருளை தயாரிப்பதற்காக இந்நிறுவனம் காயல்பட்டினத்தில் தொழிற்சாலையை நிறுவியது. அதற்காக, அப்போதைய மெட்ராஸ் அரசாங்கம் காயல்பட்டினத்திலிருந்து 1064 ஏக்கர், புன்னைக்காயலிலிருந்து 175 ஏக்கர், சேர்ந்தமங்கலத்திலிருந்து 142 ஏக்கர் நிலங்களை வழங்கியது. பின்னர், 30 ஆண்டு குத்தகை அடிப்படையில் காயல்பட்டினத்திலிருந்து 144 ஏக்கர், புன்னைக் காயலிலிருந்து 448 ஏக்கர், சேர்ந்தமங்கலத் திலிருந்து 200 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இக்குத்தகை 1993இல் நிறைவுற்றது.

DCW நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு வருமானம் 1275 கோடி ரூபாய். இதில் 195 கோடி ரூபாய் அதன் குஜராத் பிரிவிலிருந்து வருகிறது. எஞ்சிய 1080 கோடி ரூபாய் காயல்பட்டினத்திலுள்ள பிரிவின் மூலம் வருகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 2000 பேர் பணியாற்றுகின்றனர். இதில் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் மட்டுமே உள்ளனர். காயல்பட்டினம் நகராட்சிக்கு இந்நிறுவனம், சொத்து வரி வகைக்கு ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் வரையும், தொழில் வரி வகைக்கு ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் ரூபாயும் செலுத்துகிறது. காயல்பட்டினம் நகராட்சியின் அனைத்து வகை வருமானமான ஆண்டுக்கு சுமார் 4 கோடி ரூபாயில், DCW தொழிற்சாலை மூலம் வரும் வருமானம் சுமார் 6 சதவீதம் மட்டுமே.

2500 ஏக்கர் நிலம் தன் வசமுள்ளதாகக் கூறும் DCW நிறுவனம், காயல்பட்டினம் பகுதியில் மட்டும் சுமார் 1200 ஏக்கர் நிலம் வைத்துள்ளது. இதற்கான காலிமனை வரி (குறைந்தபட்சமாக) சதுர அடிக்கு 10 பைசா என அந்நிறுவனம் கட்டியிருந்தாலும், காயல்பட்டினம் நகராட்சிக்கு இவ்வகையில் மட்டுமே ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். ஆனால், DCW நிறுவனம் காலிமனை வரி கட்டுவதாகத் தெரியவில்லை.

தயாரிக்கப்படும் பொருட்களும் அவற்றின் விளைவுகளும்

காஸ்டிக் சோடா: காயல்பட்டினத்தில் DCW நிறுவனம் தயாரிக்கத் துவங்கிய முதல் பொருள் காஸ்டிக் சோடா. (அதன் தற்போதைய உற்பத்தி அளவு 1 லட்சம் டன். வருவாய் ரூ.210 கோடி.) இதற்கான மூலப்பொருள் உப்பு. (கொள்முதல் 14 கோடி ரூபாய்.) காஸ்டிக் சோடா தயாரிப்பில் உபரியாக உருவாகுவது க்ளோரின் வாயு. இந்த வாயுவை DCW நிறுவனம் பல ஆண்டுகளாக காற்றிலேயே கலக்க விட்டிருந்தது. இதனால் காயல்பட்டினத்தில் பலமுறை புகை மண்டலம் உருவானது உண்டு. இதற்காக அரசு DCW நிறுவனத்தை தண்டித்ததும் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கியதுமில்லை. தற்போது DCW நிறுவனம் க்ளோரின் வாயுவை பிற பொருட்களை தயாரிக்க பயன்படுத்துவதாகக் கூறுகிறது.

இந்நிறுவனத்தில் காஸ்டிக் சோடாவை தயாரிக்க 2007ஆம் ஆண்டு வரை (சுமார் 50 ஆண்டுகளாக) மிகவும் ஆபத்தான மெர்க்குரி பாதரசத்தை அது பயன்படுத்தி வந்தது. DCW கழிவு கடலில் கலந்து, அக்கழிவின் வாயிலாக வெளியான மெர்குரி இறந்த மீன்களின் வயிற்றில் இருந்ததற்கான ஆதார ஆய்வறிக்கைகள் பல உள்ளன. இந்நிறுவனம் மெர்குரியைப் பயன்படுத்துவதை நிறுத்தி 4 ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறுகிறது. ஆனால், கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கழிவுநீர் ஆய்விலும் மெர்குரி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாலி வினைல் க்ளோரைட் (PVC): DCW நிறுவனத்தின் முக்கிய உற்பத்திப் பொருட்களுள் ஒன்று PVC. (அதன் தற்போதைய உற்பத்தி அளவு 90,000 டன். வருவாய் 524 கோடி ரூபாய்). PVC தயாரிப்பதற்கான மூலப்பொருள் VCM. (கொள்முதல், 394 கோடி ரூபாய்.) கத்தர் நாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்படும் இம்மூலப் பொருள், மக்கள் நெருக்கமாக வாழும் முத்தையாபுரம், ஸ்பிக் நகர், முக்காணி, பழைய காயல், ஆத்தூர் உள்ளிட்ட ஊர்கள் வழியாக லாரிகள் மூலம் DCW தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

புற்றுநோயை உருவாக்கக்கூடிய தன்மையைக் கொண்ட இந்த VCM கொண்டு செல்லப்படும்போது விபத்து நேர்ந்தால், பல மைல்கள் தொலைவுக்கு தீய விளைவுகளை உண்டாக்கக் கூடியது. எனவே, PVC தயாரிக்கும் பல நிறுவனங்கள், அதற்கான மூலப்பொருளான VCMஐ தரை வழியாக பைப் மூலமே கொண்டு செல்கின்றன. ஆனால் DCW நிறுவனமோ இதற்கு டேங்கர் லாரிகளைப் பயன்படுத்துகிறது. இந்த லாரிகள் விபத்துக்குள்ளான நிகழ்வுகள் 2011, 2012இல் நடந்துள்ளது. நல்ல வேளையாக தொழிற்சாலையில் VCM வேதிப்பொருளை இறக்கிவிட்டு லாரிகள் திரும்பியபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. ஒருவேளை லாரிகளில் VCM இருந்திருந்தால்…. நினைக்கவே பயங்கரமாக உள்ளது.

ட்ரை க்ளோரோ எத்திலின்  Tri Chloro Ethylene:

DCW நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு பொருள் ட்ரை க்ளோரோ எத்திலின். (அதன் தற்போதைய உற்பத்தி அளவு 7200 டன். வருவாய் 47 கோடி ரூபாய்.) இதற்கான மூலப்பொருள் கால்சியம் கார்பைட். (கொள்முதல் 22 கோடி ரூபாய்.) ட்ரை க்ளோரோ எத்திலின் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சின்தடிக் ருட்டைல் Synthetic Rutile: இது DCW நிறுவனத்தின் மற்றொரு உற்பத்திப் பொருள். (அதன் தற்போதைய உற்பத்தி அளவு 48,000 டன். வருவாய் 240 கோடி ரூபாய்.) இதனை தயாரிக்க, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இல்மனைட் மணலை DCW நிறுவனம் (75 கோடி ரூபாய்க்கு) கொள்முதல் செய்கிறது. இப்பொருள் கதிர்வீச்சுத் தன்மை கொண்டது. மேலும் இப்பொருள் தயாரிக்கப்படும்போது உருவாகும் கழிவு காரணத்திற்காக DCW நிறுவனம், 1997ஆம் ஆண்டில் 5 மாதங்கள் மூடப்பட்டது. மேலும் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்திலும் இதே காரணத்திற்காக இந்த உற்பத்திப் பிரிவு மூடப்பட வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிந்துரையும் செய்யப்பட்டும், நடவடிக்கை எதுவுமில்லை.

நிலக்கரி மூலம் மின் உற்பத்தி:

DCW நிறுவனம் தனது தேவைக்கென மின்சாரம் உற்பத்தி செய்ய 2006ஆம் ஆண்டு அனுமதி பெற்றது. 58 மெகாவாட் அளவில் உற்பத்தி செய்ய குறைந்தளவு மாசு கொண்ட வெளிநாட்டு நிலக்கரி பயன்படுத்தப்படும் என அது துவக்கத்தில் தெரிவித்திருந்தது. பின்னர், வெளிநாட்டில் நிலக்கரி வாங்குவதற்கு அதிக செலவாவதால் (அதிக மாசு கொண்ட) உள்நாட்டு நிலக்கரியைப் பயன்படுத்தத் துவங்கியது. (கொள்முதல் 158 கோடி ரூபாய்.) உற்பத்தியாகும் உபரி மின்சாரத்தை சந்தையில் விற்கவும் துவங்கியது இந்நிறுவனம்.

நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்போது உருவாகும் Fly ash என்ற பொருளை தனியார் சிமெண்ட் நிறுவனத்திற்கு வழங்கிவிடுவதாகவும் DCW நிறுவனம் உறுதியளித்திருந்தது. ஆனால், இந்நிறுவனத்தின் Fly ash கழிவுகள், நீரோடையில் கொட்டப்பட்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் தெரிவித்துள்ளது.

DCW நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம்

தான் தயாரிக்கும் பொருட்களின் அளவை அதிகரிக்கவும், புதிதாக ஒரு பொருளைத் தயாரிக்கவும் அனுமதி கோரி 2010ஆம் ஆண்டு இந்நிறுவனம் விண்ணப்பித்தது. 500 கோடி ரூபாய் முதலீட்டில் செய்யப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் 90 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம், ஆண்டொன்றுக்கு ஜிக்ஷீவீTri Chloro Ethylene உற்பத்தி 7200 டன்னிலிருந்து 15,480 டன் எனவும், PVC உற்பத்தி 90,000 டன்னிலிருந்து 1,50,000 டன் எனவும் அதிகரிக்கும். புதிதாக சிPVC என்ற பொருள் 14,400 டன் அளவில் உற்பத்தி செய்யப்படும். நிலக்கரி மூலம் மின் உற்பத்தி 58 மெகாவாட்டிலிருந்து 108 மெகாவாட் என அதிகரிக்கும்.

DCW நிறுவனத்தால் இதுவரை சுற்றுப்புறச் சூழலும், பொதுமக்களும் பெருமளவில் பாதிப்பிற்குள்ளானதைக் கருத்திற்கொண்டு, நவம்பர் 29, 2011 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற DCW நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் குறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட காயலர்கள் உள்ளிட்ட பலர் இதற்கு அரசு அனுமதியளிக்கக் கூடாது என தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மேலும், இத்திட்டம் குறித்து இவ்வாண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி சென்னையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தனது எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்தார். இருப்பினும், மத்திய மாநில அரசமைப்புகள் ஒப்புதல் தெரிவித்த வண்ணம் உள்ளன.

காயல்பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற மக்கள் இத்தொழிற்சாலையை எதிர்ப்பது ஏன்?

DCW நிறுவனம் பல ஆண்டுகளாக சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தி வருகிறது. காற்றிலும், கடலிலும், நிலத்திலும் இத்தொழிற்சாலை வெளியேற்றும் கழிவுகள் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இத்தொழிற்சாலையின் கழிவுகள் மொத்தமாக சேர்த்து வைக்கப்பட்டு, பெரும்பாலும் மழைக்காலங்களின்போது திறந்து விடப்படுகிறது. அவ்வாறு திறந்துவிடப்படும் கழிவு நீர் காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், திருச்செந்தூர், ஆலந்தலை, மணப்பாடு உள்ளிட்ட ஊர்களின் கடற்பரப்பில் கலந்து நீல நிறத்தில் காட்சியளிக்க வேண்டிய கடல் முற்றிலும் செந்நிறமாக மாறிவிடுகிறது.

காயல்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருச்செந்தூர், இந்துக்களின் புனிதத்தலமாகும். நாடெங்கிலிருந்தும் வழிபாட்டிற்காக அங்குள்ள முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலையட்டிய கடலில் புனித நீராடுவது வழமை. கடந்த ஆண்டு அவ்வாறு பக்தர்கள் கடலில் நீராடியபோது, DCW தொழிற்சாலையின் கழிவு நீர் கலந்திருந்த காரணத்தால், அதில் குளித்தோரின் உடல்களில் அரிப்பு ஏற்பட்டு அவர்கள் துன்பமுற்றதாக அன்றைய நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

DCW தொழிற்சாலையின் மூலம் சுற்றுச்சூழல் பெரிதும் மாசடைவதால் ஏராளமான மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். (அவர்களில் பலர் இறந்தும் உள்ளனர்.) இதுகுறித்த எந்த ஆய்வும் முறைப்படி செய்யப்படவில்லை. இது இவ்வாறிருக்க, DCW நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் புதிதாக வெளிவந்துள்ளது. இந்நிறுவனத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படாமல் புதிய திட்டங்களுக்கு அனுமதியை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கக்கூடாது.

DCW நிறுவனத்தின் இப்புதிய திட்டத்தால் ஆபத்துகள் பல மடங்கு அதிகரிக்கும். பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய VCM வேதிப் பொருளைக் கொண்டு செல்லும் லாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அவற்றின் விபத்துக்கள் வாய்ப்பும் அதிகரிக்கும். நிலக்கரி மூலம் மாசு அதிகரிக்கும்.

DCW நிறுவனமும் தாமிரபரணி தண்ணீரையே நம்பியிருப்பதால், ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு அதிகமுள்ள காயல்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் மேலும் தட்டுப்பாடு ஏற்படும். இயற்கை வளங்கள் மேலும் பாதிக்கப்படும். புற்றுநோய் உள்ளிட்ட நோய்களில் ஆட்படுவோரின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரிக்கும்.

இக்காரணங்களுக்காக, DCW நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் நிறுத்தவும், நடப்பு உற்பத்தி பொதுமக்கள், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் கட்டுப்படுத்தவும் கோரி, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பில், கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதியன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் வட்டார நல கூட்டமைப்புகள், நகர்மன்ற அங்கத்தினர், அரசியல் சர்வ கட்சியினர், வணிகர் சங்கத்தினர், அமைப்பு சாரா வணிகர்கள், வாகன ஓட்டுநர் சங்கத்தினர், அமைப்பு சாரா வாகன ஓட்டுநர்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் இணைந்து முழுக் கடையடைப்பும், அன்று மாலை 04.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணியளவில் விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடத்தி முடித்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் 10ஆம் தேதி திங்கட்கிழமையன்று, சென்னை வாழ் காயலர்கள் சுமார் 300 பேர், சென்னை கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் திரண்டனர்.

துவக்கமாக, DCW தொழிற்சாலை தொடர்பான பல்வேறு கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சுமார் 200 காயலர்கள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கட்டணம் செலுத்தி கடிதமாக அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, அங்குள்ள கேளரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், DCW தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதன் மீது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்தியும், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, அதன் செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், மார்க்க அறிஞர் மவ்லவீ ஹாமித் பக்ரீ மன்பஈ உள்ளிட்டோர் பேசினர்.

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் உறுப்பினர் டாக்டர் பாலாஜி, DCW தொழிற்சாலையின் விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு அமைத்து, அதன் மூலம் பெறப்படும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார். பின்னர், காயலர்களை செய்தியாளர்கள் சந்தித்து கருத்துக்களைக் கேட்டு பதிவு செய்துகொண்டனர்.

DCW தொழிற்சாலை, அரசின் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மதித்து செயல்பட்டாலே போதும் என்றும், மக்கள் நலனையும், சுற்றுச்சூழலையும் பாதிக்காமல் அது செயல்படுவதையே தாங்கள் விரும்புவதாகவும் காயல்பட்டினம் மக்கள் உறுதியுடன் தெரிவிக்கின்றனர்.

இவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இனியும் மக்கள் நலனை மதிக்காமல் தொழிற்சாலை இயங்க அரசு அதைக் கண்டும் காணாதிருக்குமானால், அடுத்தகட்ட போராட்டத்தை இன்னும் வலிமையுடன் நடத்த ஆயத்தமாக உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

**

காயல்பட்டிணம் மக்களின் குரல்

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் காயல்பட்டினம் வருகை:

சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் முன்வைக்கப்பட்ட முறையீட்டைத் தொடர்ந்து, அதன் தலைமை உதவி பொறியாளர் மோகன் நாயுடு, சுற்றுச்சூழல் தலைமை இணைப் பொறியாளர் சார்லஸ், அதன் ஆய்வக துணை இயக்குநா மாரிமுத்து, சுற்றுச்சூழல் தலைமை இணைப் பொறியாளர் கிருஷ்ணராம், தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் கோகுல் தாஸ், தூத்துக்குடி மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை விஞ்ஞான துணை அலுவலர் சுரேஷ் குமார் ஆகியோரடங்கிய குழுவினர், 22.12.2012 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில், ஆய்வக பரிசோதனைக்கான அனைத்து ஏற்பாடுகளுடனும் காயல்பட்டினம் வருகை தந்தனர்.


ஊரின் ஒட்டுமொத்த எதிர்ப்பு:

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் சுமார் 50 ஆண்டு காலமாக இயங்கி வரும் DCW தொழிற்சாலையால் நகரில் சுற்றுச்சூழல் பெரிய அளவில் மாசடைந்துள்ளது. புற்றுநோய் உள்ளிட்ட கொடிய உயிர்க்கொல்லி நோய்களுக்கு இந்த ஆலையின் கழிவுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்ற அச்சம் நகர பொதுமக்கள் அனைவரிடமும் உள்ளது.


இல்மனைட் ஆலையை மூடி நம்பிக்கையளிக்க வேண்டுகோள்:

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்டப் பிரிவு பரிந்துரைத்த படி, DCW ஆலையின் இல்மனைட் பிரிவு மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று வரை அது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. எனவே, துவக்கமாக DCW தொழிற்சாலையின் இல்மனைட் பிரிவை உடனடியாக மூட உத்தரவிடுவதன் மூலம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது நகர பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

சுதந்திரமான வல்லுநர் குழுவினர் ஆய்வுக்கு கோரிக்கை:

நீங்கள் செய்யும் ஆய்வுடன் நிறுத்திக் கொள்ளாமல், ஏற்கனவே எமது காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தங்களிடம் முன்வைக்கப்பட்டபடி, DCW தொழிற்சாலையால் இதுவரை நகரில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு குறித்தும், பொதுமக்களின் உடல்நலன் குறித்தும் சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். அதுபோல, DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்தால் ஏற்படவிருக்கும் விளைவுகள் குறித்தும் சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கையளிக்க உத்தரவிட வேண்டும். இந்த அனைத்து ஆய்வறிக்கைகளும் பெறப்படும் வரை அத்தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதியளிக்கவே கூடாது.


சுற்றுச்சூழல் மாசுகளால் உடல் நலன் பாதிப்பு:

சுற்றுவட்டாரத்திலுள்ள பலருக்கு இதனால் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து பலரால் புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது. ஆனால், எங்கள் மக்களோ புற்றுநோய் உள்ளிட்ட கொடிய உயிர்க் கொல்லி நோயால் பீடிக்கப்பட்டும், எங்கள் குழந்தைகள் ப்ரைமரி காம்ப்ளக்ஸ் பாதிப்பிற்குள்ளாகியும் அனுதினமும் வேதனைகளை அனுபவித்து வருகிறோம்.


குழந்தைகள் நல மருத்துவருடன் சந்திப்பு:

குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் இஸ்மாயில் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:


‘‘சுற்றுச்சூழல் மாசு காரணமாக நகரில் ஒரு பாவமும் அறியாத பச்சிளங்குழந்தைகள் எல்லாம் படாத பாடுபட்டு வருகின்றனர். பிறந்து 15 நாட்களே ஆன பச்சைக் குழந்தைகளுக்கெல்லாம் இளைப்பும், சுவாசக் கோளாறும் ஏற்படுவதை அனுதினமும் கொதிப்புடன் கவனித்து வருகிறேன்”.


கடையக்குடி மீனவர்களின் முறையீடு:

காயல்பட்டினம் கடையக்குடி கடற்கரையில் அதிகாரிகளைச் சந்தித்த மீனவர்கள், தொழிற்சாலையின் கழிவு நீர் கடலில் கலப்பதால் தினந்தோறும் இன்னல்களை அனுபவித்து வருவதாகத் தெரிவித்தனர்.


உடலில் தாங்க முடியாத அளவுக்கு அரிப்பு ஏற்படு வதாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத்தக்க அரிய வகை மீன்களெல்லாம் ஆலையின் அமிலக் கழிவுகள் காரணமாக அடிக்கடி கடலில் செத்து மிதப்பதாகவும், சாதாரண நேரங்களில் நன்றாக ஓடும் தமது படகுகளின் இன்ஜின் கருவிகள், ஆலையின் அமிலக் கழிவு நீர் கலக்கப்பட்ட கடற்பரப்பை அடைந் ததும் வித்தியாசமான சப்தத்துடன் இயங்குவதாகவும், அதைக் கொண்டே கழிவு நீரின் பாதிப்பை தங்களால் உணர்ந்துகொள்ள முடியும் என்றும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

ஆதரவு: http://poovulagu.in/?p=1739

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...