அதிரை மக்களின் பெருந்தன்மை... விரட்டியவர்களுடன் சகோதரத்துவம்

Editorial
1
தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுத்த   வெளியாட்கள் செல்ல முடியாதவாறு சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் அடைக்கப்பட்டு உள்ளன. அதே போல் அதிராம்பட்டினத்தின் எல்லைகளும் அடைக்கப்பட்டு அத்தியாவசிய தேவைக்காக செல்வோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊரின் நிலை இதுதான் என்றாலும் அதிராம்பட்டினத்தின் நிலை சற்றே வித்தியாசமானது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடங்கிய தருணத்தில் ஒவ்வொரு ஊர்களிலும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டனர். இப்படி அதிராம்பட்டினத்திலும் சிலர் தனிமை படுத்தப்பட்டனர். இவர்கள் யாரும் கொரோனா நோயாளிகள் அல்ல. 

ஆனால், அதிராம்பட்டினத்தில் ஏராளமானோருக்கு கொரோனாவாம் என்ற வதந்தியை சங்கிகள் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுத்தீ போல் பரப்பின. முதலில் ஒரு ஊருக்கு எதிரானதாக பரப்பப்பட்டு பின்னர் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு எதிராக அந்த வதந்தியை பரப்பினர் சங்கிகள்.

விளைவு, அதிராம்பட்டினத்தை சேர்ந்த யாரையும் ஊருக்குள் விடக்கூடாது என கிராம பஞ்சாயத்துக்கள் வாய்மொழி உத்தரவை பிறப்பித்தன. அதிரையை சேர்ந்த மருத்துவமனைகளுக்கு வரும் செவிலியர்களைக்கூட அவர்கள் அனுப்பவில்லை. ஒரு கட்டத்தில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு செவிலியர்கள் மீண்டும் ஊருக்கு பணிக்காக வந்தனர். 

ஆனால்,  அதிராம்பட்டினத்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து இதே சிக்கலை சந்திக்கலாயினர். ஒரு அவசியத் தேவைக்காக கூட பக்கத்து கிராமங்களுக்கு அவர்களால் செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது. காவல்துறை அமைத்த தடுப்புகளை கடந்த பிறகும் கிராமமக்கள் வைத்துள்ள தடுப்புகளை கடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஊரில் உள்ள மக்களுக்கு பால் விநியோகம் செய்ய பக்கத்து கிராமத்தில் பால் வாங்க செல்லும் அதிரையர்களை தடுத்து நிறுத்தி மிரட்டும் வேலைகளிலும் அண்டை கிராம மக்களை வைத்து சங்கிகள் ஈடுபட்டனர்.

 அதிராம்பட்டினத்தை சேர்ந்த பல தென்னை விவசாயிகளின் தோப்புகள் சுற்றுவட்டார கிராமங்களில் தான் உள்ளன. அங்கும் கடந்த ஒரு மாதமாக செல்ல விடாமல் கிராம மக்கள் தடுத்துள்ளனர். இதனால் விவசாயிகள் தோப்புகளை பரமாரிக்க முடியாமல், விளைச்சலை பார்வையிட வாய்ப்பில்லாமல் மற்றும் தேங்காய்களை எடுத்து வியாபாரம் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகினர். தங்கள் கண்காணிப்பு, பராமரிப்பு இன்றி பல நூறு ஏக்கர் தென்னை மரங்கள் என்ன நிலையில் உள்ளன என்ற அச்சம் தற்போது அவர்களை தொற்றிக் கொண்டு உள்ளது. கஜா புயலில் லட்சக்கணக்கான தென்னைகளை இழந்த அதிராம்பட்டினம் விவசாயிகளுக்கு இது மற்றுமொரு பேரிழப்பு.

இப்படி சங்கிகள் வதந்தியை பரப்பி அப்பாவி சுற்றுவட்டார கிராம மக்களிடம் அச்ச உணர்வை விதைத்த காரணத்தால் அதிரை மக்கள் பல வகைகளில் இழப்பை சந்தித்துள்ளனர். ஆனால், சுற்றுவட்டார கிராமமக்களில் பெரும்பாலானோர் அதிராம்பட்டினத்தை சார்ந்தே உள்ளனர். விளை பொருட்களை விற்பனை செய்வது தொடங்கி, அரசு சார்ந்த பணிகள், வங்கிப் பணிகளை மேற்கொள்வதற்கும், ஆவணங்களை பெறுவதற்கும், நூறு நாள் வேலைப்பணியில் ஈடுபடுவதற்கும் என அதிராம்பட்டினம் அவர்களுக்கு தேவைப்படுகிறது.

இதற்காக அவர்கள் நாள்தோறும் அதிராம்பட்டினத்துக்கு வந்து செல்கின்றனர். எங்களை தடுக்க உங்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என அதிரையை சேர்ந்த யாரும் மல்லுக்கட்டவில்லை. மாறாக வழக்கம் போல் ஊருக்கு வருபர்களிடம் நட்புடனே பழகுகிறார்கள். எந்த விருப்பு வெறுப்பையும் அவர்கள் மீது காட்டுவதில்லை. காரணம் இவ்வாறு ஊருக்கு வரும் அப்பாவி கிராம மக்கள் இதற்கு காரணம் இல்லை, இதற்கு பின்னால் ஒரு சமூக விரோத சங்கி கும்பலின் சதி உள்ளது என்று அதிரை மக்கள் நன்கு அறிந்து வைத்து உள்ளனர்.

இதுபோல் சுற்றுவட்டார கிராம மக்களும் தங்களை சுற்றி நடைபெறும் சூழ்ச்சிகளை உணர்ந்து எந்த ஒரு சமூகம், ஊர் மீதும் வெறுப்பை கொட்டிவிடாமல் எப்போதும் போல் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்.

Post a Comment

1Comments
  1. நம் ஊரில்தான் ஊர்கட்டுப்பாடும் கிடையாது ஊருக்கென்று ஒரு தலைவரும் கிடையாது தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனான ஊர் நம் ஊர் என்ற பெறுமைஉண்டு.இன்னும் எவ்வவுபட்டாலும் நாம் இப்படிதான் சொல்லிக்கொண்டிருப்போம்.

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...