அதிரையில் நல்லவர்கள் போல் நடித்து கழுத்தறுக்கும் விசா மோசடி கும்பல்

அதிரையில் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு செல்ல முயல்பவர்கள் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா என்றால் ஒரு தொகை, ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அதைவிட கூடுதல் தொகை செலவழிக்கின்றனர். தற்போது கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் வேலைக்காக செல்லத் தொடங்கி உள்ளனர்.

இவ்வாறு வெளிநாடு செல்ல அங்கு தங்கி இருக்கும் உறவினர் நண்பர்கள் மூலம் விசா ஏற்பாடு செய்து கொள்கின்றனர். மற்றொரு பிரிவினர் உள்ளூரில், சென்னையில் அதிரையர்கள் வைத்திருக்கும் ட்ராவல்ஸ் நிறுவனங்களை நாடுகின்றனர். இங்கு தான் சிக்கல் தொடங்குகிறது. பல நேர்மையான ட்ராவல்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், அதற்கு சரிவிகிதத்தில் மோசடி பேர்வழிகள் ட்ராவல்ஸ் நடத்தி வருகின்றனர். விசா வாங்கிவிட்டு வெளிநாடு செல்பவர்களை விட விசா எடுத்துத்தருகிறேன் எனக்கூறி மோசடி செய்பவர்கள் தற்போது ஊருக்குள் ராயலாக வலம் வருகிறார்கள்.

தொடக்கத்தில் நல்லவர் போல் பேசி, அநியாயத்துக்கு நேர்மையானவர் போல் நடித்து தங்கள் மீது முழு நம்பிக்கையை வாடிக்கையாளர் மனதில் விதைத்துவிடுகின்றனர். குறிப்பாக பல்வேறு நாடுகளின் தூதரக இணையதளம் போல் போலியாக இணைய தளம், அந்தந்த நாட்டு மொழி தெரிந்த சில நபர்களை வைத்து கால் செண்டர் போல் ஏற்பாடு செய்து பேச சொல்வது என பல தகிடுதத்தங்களை செய்கின்றனர். இதன அவர் மேல் ஏற்படும் நம்பிக்கையில் தாய், மனைவி, மகளின் நகைகள், நிலம் சொத்துக்களை விற்று பல லட்சம் கடன் வாங்கி அந்த தொகையை ட்ராவல்ஸ் நிறுவனங்களிடம் கொடுக்கின்றனர். பணத்தை பெற்றுக்கொள்ளும் விசா மோசடி பேர்வழிகள், லீகல் டாக்குமெண்டில் கையெழுத்து வாங்கிய பிறகு தங்களது கோர முகத்தை காட்டத் தொடங்குகின்றனர்.  ஒரு நபரிடம் சில ஆண்டுகளுக்கு முன் அதிரையை சேர்ந்த ட்ராவல்ஸ் நிறுவனத்தினர் வளைகுடா நாட்டுக்கு விசா பெற்று தருவதாக கூறி பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் நியாயம் கேட்டபோது அவருக்கு கொலை மிரட்டல் வரை விடுத்துள்ளனர். 

இது போல் மோசடியில் ஈடுபடும் பல நிறுவனங்கள் முறையான உரிமம் இல்லாமல் பல பெயர்களில் அலுவலகங்களை தொடங்கி மோசடியில் ஈடுபட்டு ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இன்னும் சில நிறுவனங்கள் பல உத்திரவாதங்களுடன் வெளிநாட்டுக்கு அனுப்புவதை போல் அனுப்பிவிடுகின்றனர். வெளிநாடு சென்று விமானத்தில் இருந்து இறங்கியவுடன் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட வேலை இருக்காது. கவர்ச்சி வார்த்தைகளைக் கூறி அனுப்பி வைத்த நபரின் போன் ஸ்விட்ச் ஆஃப் எனக்காட்டும். வேறு வழியில்லை என்று கிடைத்த வேலையை செய்து அங்கு பலர் தங்கள் வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.

இது போன்ற நிறுவங்களிடம் விசா பெறும் முன்னர் இவர்கள் எத்தனை நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளனர். இது நம்பகமான நிறுவனம் தானா? இவர்களிடம் விசா பெற்று வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் தற்போது எந்த நிலையில் உள்ளனர் என்பதை எல்லாம் தீர வீசாரித்து தெளிவடைந்த பிறகே பணத்தை வழங்க வேண்டும். இந்த தெளிவு இல்லாமல் மோசடிக்காரர்களை நம்பி ஏமாந்து கடனாளியாகி, வருமானமும் இன்றி ஊருக்குள் பலர் விரக்தியான மனநிலையிலேயே திரிகிறார்கள். ஆனால்,  இவர்களை மோசடி செய்தவர்களோ ஊருக்குள் ஏதாவது ஒரு பதவியை பெற்றுக் கொண்டு எந்த குற்ற உணர்வும் ஒன்றி அடுத்த மோசடிக்கு திட்டம் தீட்ட தொடங்கிவிடுகிறார்கள். இதுபோன்ற நபர்கள் யார் எனத் தெரிந்தாலும் நமதூர் மக்கள் அவர்களை புறக்கணிக்காமல், அநியாயத்தை தட்டிக் கேட்காமல் மீண்டும் சபைக்குள் சேர்த்துக் கொள்வதும், மோசடிகள் தொடர்வதற்கு காரணமாகிறது.

 இவ்வாறு அதிகளவில் நடக்கும் மோசடிகளுக்கு முக்கிய காரணம் வெளிநாட்டு மோகம் மட்டுமே. வெளிநாடு சென்றால் முன்னேறிவிடலாம், மலையை புரட்டிவிடலாம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். உங்களின் பேராசை உங்கள் அறிவுக்கண்ணை மறைத்து குருட்டுத்தனமாக மோசடிக்காரர்களை நம்ப வைக்கிறது.

இதுபோல் அதிரையில் விசா மோசடிகளில் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "அதிரையின் விசா மோசடி டைரி" என்ற தொடரை அதிரை பிறையில் தொடங்க இருக்கிறோம். அதற்கான அறிமுகப்பதிவு மட்டுமே இது. நீங்கள் விசா மோசடியால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ, அல்லது எந்தெந்த வகைகளில் விசா மோசடி நடைபெறுகிறது என்பதை அறிந்தவராக இருந்தாலோ adiraipirai@gmail.com என்ற ஐடிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் சுய விபரம் காக்கப்பட்டு மோசடி எப்படி நடைபெற்றது என்பது மட்டும் விழிப்புணர்வுக்காக பதியப்படும். இதன் மூலம் பலர் விசா மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வழி ஏற்படும்.

Post a Comment

0 Comments