அதிராம்பட்டினம் என்னும் NRI உற்பத்தியகம்... கவுரவத்துக்காக வெளியேற்றப்படும் இளைய தலைமுறை

Editorial
1
உள்நாட்டில் வேலையின்மை, குடும்ப சூழல், அதிக சம்பளம், பெற்றோர் உறவினரின் அழுத்தம் காரணமாக அதிரையை சேர்ந்த பல இளைஞர்கள் வெளிநாடு செல்வதை தவிர்க்க முடியாத ஒன்றாக்கிவிட்டது இச்சமூகம்.

குடும்பத்துக்கு போதுமான சம்பளத்துடன் வேலை, ஓராண்டு, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுமுறை, இஸ்லாமிய மாஹூல் என சவூதி, துபாய், கத்தார் போன்ற அரபு நாடுகளுக்கு பலர் செல்கின்றனர். அரபு நாடுக்கு போனால் ஆயுள் முழுவதும் அங்க தான் கிடக்கனும், நான் லண்டன், அமெரிக்கா, கனடான்னு போயி 5 வருசம் சம்பாதிச்சுட்டு ஊருக்கு வந்துடுறேன் என்று பெரிய நாடுகளை நாடுவோர் மறுபக்கம். இதை தாண்டி, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் என ஒரு கூட்டம் சென்று கொண்டிருக்கும். இந்த வரிசையில் கடந்த சில ஆண்டுகளாக தென் கொரியா, ஆஸ்திரேலியா, நார்வே, ப்ரான்ஸ் போன்ற நாடுகளும் இணைந்துள்ளன.

இப்படி எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்கு நமதூர் மக்கள் படும்  கஷ்டம் எண்ணிலடங்காதது. புதிய பகுதி, புதிய மக்கள், புதிய கலாச்சாரம், புதிய உணவுகள், புதிய சூழல் என்று நமது வழக்கமான வாழ்க்கையையே இந்த வெளிநாட்டு வாழ்க்கை மாற்றி விடுகின்றது. பாசமான உறவுகளை விட்டு, பழகிய நண்பர்களை விட்டு, சொந்த ஊரினை விட்டு அரபு நாட்டு வெயிலும், ஐரோப்பிய குளிரிலும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்
நமதூர் மக்கள்.

இந்த கஷ்டங்கள் எதையும் பொருட்படுத்தாமல் அடுத்த தலைமுறையையும் வெளிநாட்டு சபுராளிகளாக மாற்றவே நமதூர் மக்கள் விரும்புகிறார்கள். படித்த படிப்பு இந்தியாவில் நல்ல ஊதியத்துடன் வேலை கிடைத்தாலும், இருக்கும் திறமைக்கு வாய்ப்பு கிடைத்து வாழ்க்கையில் முன்னேறும் சூழல் வந்தாலும் அவர்களை வெளிநாட்டுக்கு பார்சல் கட்டவே முயல்கிறார்கள். தனது மகன் நம்மை விட்டு பிரிந்துவிடுவான், இனி அவனை நாள்தோறும் பார்க்க முடியாது என்ற ஏக்கம் இருந்தாலும் ஊர் பேச்சுக்காகவாவது தனது மகனை NRI ஆக மாற்ற  பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

உள்நாட்டில் திறமையை பயன்படுத்தி நன்கு சம்பாதித்து கொடுத்தாலும், வெளிநாட்டு துப்பட்டி, கோடாறித் தைலம், வேட்டி மேத்துண்டு, ஸ்னிக்கர்ஸ் சாக்லேட்டுடன் வரும் பார்சல் பெட்டி தான் அவர்களை திருப்தி அடைய செய்கிறதோ என்னமோ... உள்ளூரில் இருந்து ஆசிரியராக, வழக்கறிஞராக, ஊடகவியலாளராக, அரசு அதிகாரியாக மாறி மக்களுக்கு சேவையாற்றி தனது வருமானத்தை அமைத்துக் கொள்ள விரும்பும் இளைய 90ஸ், 2k தலைமுறையையும் நமதூரின் 70ஸ் தலைமுறை உதாசீனப்படுத்தி வெளிநாட்டுக்கு மூட்டை கட்டுகிறது. விளைவு சமுதாயத்துக்காக குரல் கொடுக்க அரசுப் பணிகளில், ஊடகத்துறையில், சட்டத்துறையில் மிகச் சொற்பமானவர்களே இருக்கும் நிலை. அரசு வழங்கிய குறைந்தபட்ச இட ஒதுக்கீட்டை கூட நிரப்ப முடியாத சூழல்.

இவ்வளவு பெரிய ஊரில் எந்த துறையிலும் அண்மை காலங்களில் பேர் சொல்லும் அளவுக்கு எந்த ஒரு சாதனையாளர் உருவாகவில்லை என்றால் அதற்கு இந்த வெளிநாட்டு மோகம் தான் காரணம். சில பெற்றோர்கள் வீராப்புடன் தங்கள் பிள்ளைகளை அவர்களுக்கு பிடித்ததை படிக்க வைத்து பிடித்த துறையில் வேலைக்கு அனுப்புகிறார்கள். ஆனால் அவர்களையும் கவுரவம், கல்யாணம், பொருளாதாரம் அது இது என்று சொல்லி மூளைச்சலவை செய்து விடுகிறார்கள் மூளையில்லாத மூடர்கள் சிலர்.

வெளிநாட்டு வேலையையே குறிக்கோளாக கொண்டு ஏதோ ஒரு டிகிரியை முடித்த அதிரையை சேர்ந்த பட்டதாரிகளுக்கு சென்னையில் வந்து எப்படி வேலை தேட வேண்டும் என்று கூட தெரியவில்லை. "விசா கிடைக்கும் வரை இருப்பான், அப்றம் போய்விடுவான்" என அதிராம்பட்டினம் இளைஞர்கள் வேலை தேடி சென்றாலே ஒரு முன்முடிவோடு அனுகுகிறார்கள் முதலாளிகள். இதனால், உள்ளூரிலேயே வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பவருக்கும் வாய்ப்பு கிடைப்பது அரிதாகிவிடுகிறது..

இந்த சமுக சூழல் காரணமாகவும் நிர்பந்த நிலையினாலுமே உள்ளூரில் வண்ணத்துப்பூச்சிகளை போல் பறந்துக் கொண்டிருந்த இளைஞர்கள் பலரின் வாழ்க்கை கருப்பு வெள்ளை காகிதம் போல் அயல் நாட்டில் கிழிந்து கந்தலாகி விடுகின்றது. இளைமையை படிப்பு படிப்பு என்று செலவழித்தவர்கள் அதன் பிறகு பெற்றோருடன் செலவழிக்க முடியாமல் இந்த அழுத்தங்களால் வெளிநாடு செல்கிறார்கள். இடையில் 2 மாதம் விடுமுறைக்கு வந்து திருமணம் செய்து மனைவியை தனிமையில் விட்டுவிட்டு அயல்நாட்டில் தனிமை வாழ்க்கை. குழந்தை பேறுக்கு பலரால் வர முடியாது. தவழ்ந்த குழந்தையிடம் இவர் தான் உன் வாப்பா என்று உம்மா அடையாளம் காட்டும் நிலை. குழந்தை வளர்வதை பார்க்கும் பாக்கியம் கிடைக்காது. குழந்தையை நெறிப்படுத்தி வளர்க்க முடியாது. தந்தையின் கண்டிப்பு இன்றி குழந்தை வளர வேண்டிய நிலை.

வயோதீகத்தை அடைந்த பெற்றோரை உடன் இருந்து கவனிக்க முடியாது. பல பிள்ளைகளால் பெற்றோரின் வஃபாத்துக்கு கூட வர முடியாத சூழல், அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இப்படிப்பட்ட செல்வம் நமக்கு தேவை தானா..? உள்நாட்டில் எனக்கு எதுவுமே தெரியாது, வெளிநாட்டை தவிர வேறு வழியே இல்லை என்று இருப்பர்கள் வேண்டுமானால் அங்கு செல்லாம். ஆனால், அனைவருக்கும் என்ன கஷ்டம். நமக்கு திறமை இல்லையா? கல்வி இல்லையா? அந்த காலத்தில் படிக்காமல் பலர் கூலி வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்று கஷ்டப்பட்டனர். இன்று படித்து பட்டதாரிகளான நாமும் அதே வெளிநாட்டுக்கு சென்று கூலி வேலை செய்யும் நிலை ஏன்? அப்படியென்றால் இத்தனை ஆண்டுகள் படித்து என்ன பயன்?

இந்த நிலையை மாற்ற பெற்றோர்கள், ஊரின் உளவியல் மாற்றம் அடைய வேண்டும். நன்றாக படித்தால் நம் நாட்டிலேயே வேலை உண்டு என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும். தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும். அதிக மக்கள் தொகை, நல்ல நுகர்வோரை கொண்ட நமதூரில் நம் மக்களே தொழில் செய்யும் சாத்தியக் கூறுகளை ஏற்படுத்த வேண்டும். 10-ம் வகுப்புக்கு முன்பாகவே திறமையை கண்டறிந்து அதற்கு ஏற்ப துறைகளை தேர்வு செய்து மேல்படிப்புக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். 

இதற்கு முஹல்லா ஜமாத்துகள் NGO-க்கள் போல் செயல்படாமல் நேரடியாக இவ்விசயத்தில் தலையிட்டு உள்ளூர் கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்களை அழைத்துப் பேசி திறமைசார் பயற்சிகளை அளிக்க வேண்டும். விளம்பரத்துக்காக சில ஆயிரங்களை செலவழித்து ஒருநாள் நிகழ்ச்சியை நடத்தி கலைந்து சென்றுவிடக்கூடாது. அறிவு, தொழில்சார்கல்வியுடன், வாழ்வியல் சார் இஸ்லாமிய மார்க்க கல்வியை மாணவர்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும். திறமைசாலிகளை விட நற்பண்பு உடைய நாளைய தலைமுறையே அவசியமானது. இவை அனைத்துக்கும் முன்னர்  மதிப்பெண்கள் முக்கியம் இல்லை  என்ற அடிப்படையை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். 

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

Post a Comment

1Comments
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...