அதிரையில் இமாம், முஅத்தின்களுக்கு ஊதியம் வழங்க சிரமப்படும் பள்ளிவாசல்கள்


அதிராம்பட்டினத்தில் சுமார் 40 பள்ளிவாசல்கள் உள்ளன. இதில் பெரும்பாலான பள்ளிவாசல்களின் வருமானம் வளாகத்திலுள்ள கடைகளிலும், முஹல்லா வாசிகள் வழங்கும் மாதாந்திர சந்தா, ரமலான் மாதத்தில் கிடைக்கக்கூடிய கூடுதல் நிதியிலும் உள்ளது. ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.

 பள்ளிவாசல் வளாகங்களில் உள்ள கடைகள் மூடப்பட்டு உள்ளதால் மாத வாடகை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதேபோல் மாத சந்தா வழங்கும் முஹல்லா வாசிகளுக்கும் தொழில் வாய்ப்பு வருமானம் போன்றவை குறைந்து போன காரணத்தால் சந்தா வசூலிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தொழுகைகள் எந்த பள்ளிவாசல்களிலும் நடத்தப்படவில்லை இதனால் ஜும்மா வசூல், உண்டியல் வசூல் முற்றிலுமாக தடைபட்டுள்ளது.

 ரமலான் மாதம் தற்போது வந்துள்ள நிலையில் நோன்பு கஞ்சி வசூல், தம்மாம் வசூல், பள்ளிவாசல் புணரமைப்பு வசூல் இமாம், முஅத்தின்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை போன்றவை தடைப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் வருமானம் இல்லாத பள்ளிவாசல்களில் பணி புரியும் இமாம்கள்், முஅத்தின்களுக்கு மாத சம்பளம் கூட தர முடியாத சூழல் பெரும்பாலான பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளிவாசல் புனரமைப்பு பணிகளுக்கு நிதி இல்லாமல் தவிப்பதாகவும் பல புனரமைப்பு பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் வேதனையுடன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய பள்ளிவாசல் நிர்வாகி ஒருவர் வருமானம் முற்றிலும் தடை பட்டு போனதால் இமாம்களுக்கும் முஅத்தின்களுக்கு பாதி மாத சம்பளம் மட்டுமே வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக வேதனையுடன் கூறுகிறார்.

எனவே பொருளாதார பலம் படைத்தவர்கள் சூழ்நிலை கருதி தங்கள் முஹல்லாவில் பள்ளிவாசல்களுக்கோ அல்லது வருமானம் இல்லாத பள்ளிவாசகளுக்கோ கூடுதல் நிதி உதவி வழங்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: இந்த படத்தில் உள்ள பள்ளிகள் எல்லாம் இந்த பிரச்சனை உள்ளது என்று அர்தமில்லை. இந்த பதிவுக்கு படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக மட்டுமே இதனை ஒரு REPRESENTATIVE படமாக வெளியிடுகிறோம். யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்.

Post a Comment

0 Comments